2 டெம்போவில் கடத்திய 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

ஆரல்வாய்மொழி அருகே 2 டெம்போக்களில் கடத்திய 10 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய டிரைவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2022-03-22 15:23 GMT
ஆரல்வாய்மொழி:
ஆரல்வாய்மொழி அருகே 2 டெம்போக்களில் கடத்திய 10 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய டிரைவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
தீவிர சோதனை 
நெல்லை மாவட்டத்தில் இருந்து கனிம பொருட்கள் லாரிகளில் அளவுக்கு அதிகமாக ஏற்றி கொண்டு வருவதாக குமரி மாவட்ட போலீசாருக்கு தினமும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. 
இதனையடுத்து குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவின்பேரில் போலீசார் ஆரல்வாய்மொழி அருகே உள்ள 4 வழிச்சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். அதே போல் நேற்றும் ஆரல்வாய்மொழி போலீசார் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் அதிக பாரம் ஏற்றி வந்த ஒரு சில லாரிகளை மடக்கி பிடித்து சோதனை செய்து கொண்டிருந்தனர். 
 10 டன் ரேஷன் அரிசி
அப்போது அந்த வழியாக 2 டெம்போக்கள் தார்பாயால் மூடியவாறு வந்தன. போலீசாரை கண்டதும் அவற்றில் இருந்த டிரைவர்கள் தங்களைதான் பிடிக்க வருவதாக நினைத்து வண்டியை நிறுத்தி விட்டு இறங்கி தப்பி ஓடி விட்டனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் 2 டெம்போக்களையும் சோதனை செய்தனர்.  அப்போது, அவற்றில் மூடை மூடையாக 10 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து டெம்போக்களுடன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் நெல்லை மாவட்டத்தில் இருந்து ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட அரிசி நாகர்கோவில் நுகர்பொருள் வாணிப கழக குடோனில் ஒப்படைக்கப்பட்டது. மேலும், தப்பி ஓடிய டிரைவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்