நூற்பாலை அதிபரிடம் ரூ.2¼ கோடி மோசடி

வேடசந்தூர் நூற்பாலை அதிபரிடம், ரூ.2¼ கோடிக்கு துணி வாங்கி மோசடி செய்த குஜராத் வியாபாரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2022-03-22 15:13 GMT
திண்டுக்கல்:

ரூ.2¼ கோடிக்கு துணிகள்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்தவர் பூபதி (வயது 49). இவர், வேடசந்தூரில் நூற்பாலை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் தயாரிக்கப்படும் துணியை வெளிமாநில வியாபாரிகள் மொத்தமாக வாங்கி செல்வது வழக்கம்.

இந்தநிலையில் கடந்த ஆண்டு குஜராத் மாநிலம் சூரத் பகுதியை சேர்ந்த வியாபாரி தினேஷ்குமார் ஜாங்கிட் (33) என்பவர், பூபதிக்கு அறிமுகம் ஆனார். இதையடுத்து பூபதியிடம் இருந்து தினேஷ்குமார் ஜாங்கிட் மொத்தமாக துணிகளை வாங்கினார். அதற்கு உரிய பணத்தை அவர் உடனுக்குடன் கொடுத்தார். இதனால் நம்பிக்கையின் பேரில் பூபதி தொடர்ந்து அவரிடம் துணிகளை விற்றார். 

அந்த வகையில் கடந்த சில மாதங்களில் மட்டும் ரூ.2¼ கோடி மதிப்பில் துணிகளை விற்றுள்ளார். ஆனால் துணிக்கான தொகையை கொடுக்காமல் தினேஷ்குமார் ஜாங்கிட் காலம் கடத்தி வந்தார். இதனால் ஏமாற்றம் அடைந்த பூபதி, அவரை தொடர்பு கொள்ள முயன்ற போது அவரது செல்போன் ‘சுவிட்ச்ஆப்’ செய்யப்பட்டிருந்தது. 

குஜராத் வியாபாரி மீது வழக்கு

இது குறித்து விசாரித்த போது தினேஷ்குமார் ஜாங்கிட் பலரிடம் துணிகளை வாங்கி மோசடி செய்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பூபதி, மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோதா தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷ்குமார் ஜாங்கிட்டை தேடி வந்தனர்.

 இதற்கிடையே அவர் நாமக்கல் மாவட்டத்தில் ஒரு நூற்பாலை அதிபரிடம் ரூ.80 லட்சத்துக்கு துணி வாங்கி மோசடி செய்தது தொடர்பாக, ராசிபுரம் சிறையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை, திண்டுக்கல் வழக்கில் கைது செய்து விசாரிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

மேலும் செய்திகள்