பா.ஜனதாவினர் தினமும் நாட்டை பிளவுப்படுத்துகிறார்கள்- சிவசேனா குற்றச்சாட்டு

பாகிஸ்தான் உருவாக முகமது அலி ஜின்னா நாட்டை ஒருமுறை பிரித்தார். ஆனால் பா.ஜனதா தலைவர்கள் நாட்டை தினமும் பிளவுப்படுத்துகிறார்கள் என்று சிவசேனா குற்றம்சாட்டி உள்ளது.

Update: 2022-03-22 14:28 GMT
கோப்பு படம்
மும்பை, 
பாகிஸ்தான் உருவாக முகமது அலி ஜின்னா நாட்டை ஒருமுறை பிரித்தார். ஆனால் பா.ஜனதா தலைவர்கள் நாட்டை தினமும் பிளவுப்படுத்துகிறார்கள் என்று சிவசேனா குற்றம்சாட்டி உள்ளது.
தினமும் பிளவுப்படுத்துகிறார்கள்
மராட்டியத்தில் சிவசேனா தலைமையிலான மகா விகாஸ் அகாடி அணியுடன் கூட்டணி வைக்க தயார் என்று ஒவைசி தலைமையிலான ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் எம்.பி. இம்தியாஸ் ஜலீல் எம்.பி. சமீபத்தில் கூறியிருந்தார். இதை பா.ஜனதா கடுமையாக விமர்சித்ததோடு, சிவசேனாவை ‘ஜனாப் சேனா’ என்று அக்கட்சி தெரிவித்தது. 
இந்தநிலையில் நாக்பூரில் பேட்டி அளித்த சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் எம்.பி. கூறியதாவது:-
நாட்டில் 22 கோடி முஸ்லிம்கள் உள்ளனர். அவர்கள் பெருமளவில் பா.ஜனதா மற்றும் சிவசேனாவுக்கு வாக்களித்துள்ளனர். பாகிஸ்தானை உருவாக்க முகமது அலி ஜின்னா நாட்டை ஒருமுறை பிரித்தார். ஆனால் பா.ஜனதா தலைவர்கள் இந்து, முஸ்லிம்கள் இடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தும் பேச்சுகள் மூலம் தினமும் நாட்டை பிளவுப்படுத்துகிறார்கள். 'ஜனாப் சேனா' என்று கூறும் பா.ஜனதா தலைவர்கள், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பெயரை மாற்றுவார்களா?, அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் பெயர் ஜனாப் பகவத் என்று மாற்றப்படுமா?.
இவ்வாறு அவர் கூறினார். 
மந்திரி நவாப் மாலிக் ராஜினாமா?
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட மந்திரி நவாப் மாலிக் ராஜினாமா செய்வாரா? என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு சஞ்சய் ராவத் பதிலளித்து கூறியதாவது:-
இதுபோன்ற பிரச்சினை எழுந்தபோது அனில் தேஷ்முக் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அதுபோன்ற தவறை மந்திரி நவாப் மாலிக் விவகாரத்தில் செய்ய மாட்டோம். அவரை ராஜினாமா செய்யுமாறு நாங்கள் ஒருபோதும் கோர மாட்டோம். 
சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசை களங்கப்படுத்த மத்திய விசாரணை முகமைகளை பா.ஜனதா தவறாக பயன்படுத்துகிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது அமலாக்கத்துறை 23 சோதனைகளை நடத்தியது. ஆனால் கடந்த 7 ஆண்டு மோடி ஆட்சியில் 23 ஆயிரம் சோதனைகள் நடத்தப்பட்டு திகைப்பை ஏற்படுத்தி உள்ளனர். இதில் அதிகப்பட்ச சோதனைகள் மராட்டியம் மற்றும் மேற்கு வங்கத்தில் தான் நடத்தி உள்ளனர். பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் மத்திய விசாரணை முகமைகள் சோதனை நடத்தாதது ஏன்?.
இவ்வாறு அவர் கூறினார். 
---------------



  

மேலும் செய்திகள்