கோட்டூரில் வாரச்சந்தை கட்டிட பணிகள் பாதியில் நிறுத்தம்

கோட்டூரில் ரூ.1 கோடியில் கட்டப்பட்டு வரும் வாரச்சந்தை கட்டிட பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் விவசாயிகள், வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Update: 2022-03-22 13:42 GMT
பொள்ளாச்சி

கோட்டூரில் ரூ.1 கோடியில் கட்டப்பட்டு வரும் வாரச்சந்தை கட்டிட பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் விவசாயிகள், வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

வாரச்சந்தை

பொள்ளாச்சி அருகே கோட்டூரில் வாரந்தோறும் புதன்கிழமை வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. சந்தைக்கு விவசாயிகள் விளை பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இதை தவிர வியாபாரிகளும் தங்களது பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.
இந்த நிலையில் சந்தை வளாகத்தில் இருந்த கடைகள் பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது. இதனால் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருந்தது. மேலும் மழைக்கு கட்டிடம் ஒழுகியதால் விவசாயிகள், வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து தொடங்கப்பட்ட புதிய கட்டிட பணிகள் தற்போது பாதியில் நிற்கிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

மதுபாராக மாறிய வளாகம்

கோட்டூர் வாரச்சந்தை வளாகத்தில் கடைகள் கட்டுவதற்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் பணிகளும் தொடங்கி நடைபெற்று வந்தது. கட்டிட பணிகளை 6 மாத காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்று ஒப்பந்த காலம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கிடையில் கட்டிட பணிகள் தற்போது பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளது.
இதனால் அந்த இடத்தில் செடிகள் வளர்ந்து விட்டது. கட்டிட பணிகள் தாமதமாகி வருவதால் விவசாயிகள், வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் வாரச்சந்தை வளாகத்தில் மது அருந்தி விட்டு பாட்டில்களை வீசி சென்று உள்ளனர். இதனால் காலி மதுபாட்டில்கள், தண்ணீர் பாட்டில்கள் கிடக்கின்றன. மது பாராக சந்தை வளாகம் செயல்பட்டு வருகிறது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கட்டிட பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும். 
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பணிகள் தொடங்கப்படும்

இதுகுறித்து கோட்டூர் பேரூராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
கோட்டூர் பேரூராட்சியில் மூலதன மானிய திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி செலவில் வாரச்சந்தையில் 48 கடைகள் கட்டப்படுகிறது. இந்த நிலையில் கட்டிட பணிகளை மேற்கொள்வதில் ஒப்பந்ததாரர் தாமதப்படுத்தி வருகிறார். இதன் காரணமாக அவருக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது. மேலும் சந்தையில் கடைகள் கட்டும் பணிகளை உயர் அதிகாரிகளால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விரைவில் கட்டிட பணிகளை தொடங்கி விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்