ஆழியாறு அணைக்குள் முதலை நடமாட்டம்
பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணைக்குள் முதலை நடமாட்டம் உள்ளதால் சுற்றுலா பயணிகள் பீதி அடைந்து உள்ளனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணைக்குள் முதலை நடமாட்டம் உள்ளதால் சுற்றுலா பயணிகள் பீதி அடைந்து உள்ளனர்.
முதலை நடமாட்டம்
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை 120 அடி கொள்ளளவு கொண்டது. அணைக்கு மின் உற்பத்திக்கு பின் அப்பர் ஆழியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலமாகவும், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையின் மூலம் நீர்வரத்து உள்ளது. இந்த நிலையில் தற்போது மழை பொழிவு இல்லாததால் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்து விட்டது.
இதனால் பாறைகள், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பாலங்கள் வெளியே தெரிகின்றன. இந்த நிலையில் அணைக்குள் முதலை நடமாட்டம் உள்ளது.
அணைக்குள் ஆங்கிலேயர் காலத்தில் போடப்பட்ட தார் சாலையில் முதலை சிறிது நேரம் படுத்து கிடக்கின்றது. பின்னர் மெதுவாக ஊர்ந்து சென்று தண்ணீருக்குள் செல்லும் காட்சியை யாரோ வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளனர். இதனால் ஆழியாறுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பீதி அடைந்து உள்ளனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
சுற்றுலா பயணிகளுக்கு அறிவுரை
ஆழியாறு அணைக்கு நீர்வரத்து இல்லாததால் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதற்கிடையில் முதலை அணைக்குள் இருப்பது போன்ற வீடியோ வெளியாகி உள்ளது. இதன் மூலம் அணை பகுதியில் முதலை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. மழைக்காலத்தில் அப்பர் ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்ட போது, அங்கிருந்து ஆழியாறுக்கு முதலை வந்திருக்கலாம். எனவே ஆழியாறுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
படகு சவாரி செய்யும் பகுதி, அறிவு திருக்கோவிலுக்கு எதிரே அணைக்குள் சுற்றுலா பயணிகள் இறங்குவதை தவிர்க்க வேண்டும். மேலும் அணைக்குள் தண்ணீர் குறைவாக இருப்பதால் சேற்றில் சிக்கியும் உயிரிழப்பு ஏற்பட கூடும். சுற்றுலா பயணிகள் அத்துமீறி செல்வதை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் அணைக்குள் இறங்கி குளிக்கும் சுற்றுலா பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.