சர்க்கரை ஆலையை சீரமைக்க கோரி கரும்பு விவசாயிகள் போராட்டம்

திருத்தணி கூட்டறவு சர்க்கரை ஆலையை சீரமைக்க கோரி கரும்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-03-22 13:40 GMT
கரும்பு விவசாயிகள்

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் தங்கள் கரும்பை அரவைக்காக வழங்கி வருகின்றனர். இந்த ஆலையின் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் ஆலை நிர்வாகத்திடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் பல முறை கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்துதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நேற்று தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில செயலாளர் துளசி நாராயணன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் திருத்தணி கூட்டறவு சர்க்கரை ஆலையிலிருந்து சென்னை கோட்டை நோக்கி பேரணி செல்வதற்காக ஆலையின் முன்பு ஒன்று திரண்டனர்.

சீரமைக்க கோரிக்கை

அப்போது கரும்பு விவசாயிகளின் மாநில செயலாளர் பேசுகையில்:- கடந்த 1984-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். ஆட்சியில் தொடங்கப்பட்ட இந்த தொழிற்சாலை, ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் தொழிற்சாலைகளை மேம்படுத்த ரூ.37 கோடியே 90 லட்சத்தை ஒதுக்கியது. அதற்கு பின்னால் வந்த ஆட்சியாளர்கள் அதனை செயல்படுத்தவில்லை. கடந்த தமிழக அரசின் விவசாயிகளின் பட்ஜெட் கூட்டதொடரில் திருத்தணி சர்க்கரை ஆலையை புனரமைக்க நிதி ஒதுக்காமல், தமிழகத்தில் இயங்கும் ஆலைகளின் தொழில்நுட்ப கூடங்களை புனரமைக்க ரூ.30 லட்சம் மட்டும் ஒதுக்கியதாக தெரிவித்தார். உடனடியாக தமிழக அரசு ஆலையை சீரமைக்க ரூ.57 கோடியை உடனடியாக ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்க வேண்டும் என தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து சென்னை கோட்டையை நோக்கி கரும்பு விவசாய சங்கத்தினர் நடைப்பயணம் மேற்கொண்டனர், திருவாலங்காடு போலீசார் பேரணியாக புறப்பட்டவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர். பின்னர் மாலையில் விடுவித்தனர். கரும்பு விவசாயிகளின் பேரணியால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்