தலையில் கல்லை போட்டு டிரைவர் படுகொலை
தலையில் கல்லை போட்டு டிரைவர் படுகொலை
பல்லடம், மார்ச்.23-
பல்லடம் அருகே குடிபோதையில் தகாத வார்த்தையால் பேசி தகராறு செய்த டிரைவரின் தலையில் கல்லை போட்டு கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.
டிரைவர்
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
பல்லடத்தை அடுத்த கோடங்கிபாளையம் ஊராட்சி பெருமாகவுண்டம்பாளையம் பகுதியை ேசர்ந்தவர் செல்வராஜ் . அதே பகுதியில் உள்ள கல்குவாரியில் டிரைவராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி அன்னபூரணி. இவர்களுக்கு அஸ்வத் என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் அன்னபூரணி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
இதனால் செல்வராஜின் தாயார் கிருஷ்ணம்மாள் மகனுடன் வந்து தங்கி குழந்தைகளை பராமரித்து வந்தார். அஸ்வத் அருகிலுள்ள குவாரி ஒன்றில் பணிபுரிகிறார். இந்த நிலையில் சமீபகாலமாக செல்வராஜிக்கு மதுகுடி பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தினமும் மது அருந்திவிட்டு, சரிவர வேலைக்கு செல்லாமலும், அடிக்கடி மகன், மகளுடன் தகராறில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.
கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மது அருந்தி விட்டு வந்த செல்வராஜ், மகன் மகளை இருவரையும் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனை மகன் அஸ்வத் ஏன் இப்படியெல்லாம் பேசுகிறீர்கள் என்று கேட்டதாக கூறப்படுகிறது. ,இதனால் தந்தையும், மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அருகே உள்ள அறையில் செல்வராஜ் தூங்கச் சென்று விட்டார். இதற்கிடையில் தந்தை தகாத வார்த்தைகளில் திட்டியதால் ஆத்திரமடைந்த அஸ்வத் அங்கிருந்த பெரிய கல்லை எடுத்து செல்வராஜ் தலையில் போட்டார். இதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே செல்வராஜ் உயிரிழந்தார்.
பின்னர் அஸ்வத் பல்லடம் போலீஸ் நிலையம் சென்று நடந்தவைகளைக் கூறி சரணடைந்தார். இதையடுத்து சம்பவ இடம் சென்ற போலீசார் செல்வராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து அசைவத்தை கைது செய்துள்ளனர். குடிபோதையில் தகாத வார்த்தைகளால் பேசிய தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் பல்லடம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.