உர விற்பனை நிலையங்களில் வேளாண்மை அதிகாரிகள் திடீர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள உர விற்பனை நிலையங்களில் வேளாண்மை அதிகாரிகள் திடீரென ஆய்வு செய்தனர்.

Update: 2022-03-22 12:59 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள உர விற்பனை நிலையங்களில் வேளாண்மை அதிகாரிகள் திடீரென ஆய்வு செய்தனர்.

 உர விற்பனை நிலையங்களில் ஆய்வு

திருவண்ணமாலை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முருகன் அறிவுரையின் பேரில் உதவி இயக்குனர்கள் விஜயக்குமார் (தரக்கட்டுபாடு), அன்பழகன் (திருவண்ணாமலை), வேளாண்மை அலுவலர் அற்புதசெல்வி ஆகியோர் கொண்ட குழுவினர் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மொத்த உர விற்பனை நிலையங்களில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். 

அப்போது உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985-க்கு உட்பட்டு சில்லரை உர விற்பனை நிலையங்களுக்கு யூரியா உள்ளிட்ட உரங்கள் வழங்கப்பட்டது குறித்து சோதனை நடத்தப்பட்டது. 
இதில் கள்ளச்சந்தை, யூரியா உரம் பதுக்கல், யூரியாவுடன் இதர இடுபொருட்கள் கட்டாயப்படுத்தி விற்பனை செய்தல் தொடர்பாகவும் ஆய்வு செய்யப்பட்டது. 

ஆய்வின் போது விதி மீறல்களுக்கு உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985-ன் கீழ் உர உரிமம் ரத்து செய்யப்படும் என்று வேளாண்மை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். 

 நடப்பு பருவத்திற்கு...

இதுகுறித்து உதவி இயக்குனர் விஜயக்குமார் கூறியதாவது:-
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடப்பு ஆண்டு மார்ச் மாதம் முடிய 92 ஆயிரத்து 420 டன் உரங்கள் வரப்பெற்று விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு உள்ளது. 

இதில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 43 ஆயிரத்து 753 டன் யூரியாவிற்கு 7 ஆயிரத்து 576 டன் கூடுதலாக என மொத்தம் 51 ஆயிரத்து 335 வரப்பெற்று விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு உள்ளது.

இந்த மாவட்டத்தில் நடப்பு பருவத்திற்கு தேவையான உரங்கள் தனியார் உர விற்பனை நிலையங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கங்களில் 335 டன் யூரியா, 668 டன் டி.ஏ.பி., 802 பொட்டாஷ், 2 ஆயிரத்து 690 டன் காம்ப்ளக்ஸ் மற்றும் சூப்பர் பாஸ்பேட் 309 டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்