பெண்ணின் 4 பவுன் நகை அபகரிப்பு

பெண்ணின் 4 பவுன் நகை அபகரிப்பு

Update: 2022-03-22 11:29 GMT
உடுமலை அருகே, நகைக்கு பாலீஷ் போட்டு தருவதாகக்கூறி பெண்ணிடம் 4 பவுன் தங்க சங்கிலியை அபகரித்துச்சென்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
நகை பறிப்பு
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
உடுமலையை அடுத்துள்ள ஜோதிபாளையத்தைச் சேர்ந்தவர் நடராஜ் தனியார் மில்லில் பிட்டராக வேலை செய்து வருகிறார். சம்பவ தினமான நேற்று முன்தினம்  வீட்டில் நடராஜ், அவரது மனைவி, மகன் ஆகியோர் இருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு மர்ம ஆசாமி பாத்திரம், வளையல் ஆகியவற்றிற்கு பாலீஸ் போட்டுத்தருவதாக கூறியுள்ளார். 
அதனால் நடராஜின் மனைவி, தான் கையில் அணிந்திருந்த கவரிங் வளையலை கழற்றி கொடுத்துள்ளார். அந்த கவரிங் வளையல் பளிச்சென்று ஆனது. அப்போது அங்கு மற்றொரு மர்ம ஆசாமி வந்துள்ளார். அவரிடம் நடராஜ் நீங்கள் யார்? என்று கேட்டதற்கு, அந்த மர்ம ஆசாமி சூப்பர் வைசர் என்றதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து நடராஜின் மனைவி, தான் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பாலீஸ் போட்டு தருவதற்காக கழற்றி கொடுத்துள்ளார். அதை வாங்கிய அந்த மர்ம ஆசாமி குக்கரில் தண்ணீர் எடுத்துவரும்படி கூறியுள்ளார். அதை கொண்டு வந்ததும், அந்த குக்கரில் அந்த மர்ம ஆசாமி பவுடரை போட்டுள்ளார். உடனே அந்த தண்ணீர் சிகப்பு கலராக மாறியுள்ளது. பின்னர் அந்த குக்கரை சிறிது நேரம் அடுப்பில் வைக்கும்படி கூறிவிட்டு, அந்த மர்ம ஆசாமிகள் இருவரும், ஏற்கனவே அங்கு நிறுத்திவைத்திருந்த மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றனர்.
2 பேருக்கு வலைவீச்சு
அந்த தங்க சங்கிலி குக்கருக்குள் இருக்கும் என்று பார்த்தபோது நகையை காணவில்லை. அந்த மர்ம ஆசாமிகளை தேடியும் கிடைக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து நடராஜ் உடுமலை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இதையொட்டி உடுமலை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த 2மர்ம  ஆசாமிகளையும் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்