கள்ளத்தொடர்பை கைவிட மறுத்ததால் ஏ.சி.மெக்கானிக் கழுத்தை அறுத்து கொலை
மனைவியுடன் கள்ளத்தொடர்பை கைவிட மறுத்ததால் ஏ.சி.மெக்கானிக் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார்.;
வாலிபர் பிணமாக மீட்பு
சென்னையை அடுத்த ஜல்லடியன்பேட்டை ஏரிக்கரையில் கழுத்து மற்றும் மர்ம உறுப்புகள் அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் வாலிபர் பிணமாக கிடப்பதாக பள்ளிகரணை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தாம்பரம் போலீஸ் கமிஷனர் ரவி உத்தரவின் பேரில், சேலையூர் உதவி கமிஷனர் முருகேசன், பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொடூரமாக கொலை
போலீசார் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் ஜல்லடியன்பேட்டை நெசவாளர் நகரில் உள்ள ராஜீவ் காந்தி தெருவை சேர்ந்த ஏ.சி.மெக்கானிக்கான நரேஷ் (வயது 29) என்பது தெரியவந்தது.
இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் அண்ணா சாலை வழியாக வீடு திரும்பி கொண்டிருந்த போது, 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம கும்பல் ஒன்று நரேசை வழிமறித்து தூக்கி சென்று ஏரிக்கரையில் வைத்து கொடூரமாக கொலை செய்தது தெரியவந்தது.
இது குறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
4 பேர் கைது
இதில், அதே பகுதியை சேர்ந்த அருண்பாண்டியன் (28) என்பவரது மனைவியுடன் கடந்த 6 மாதங்களாக நரேசுக்கு கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாகவும், அவரை எச்சரித்தும் கள்ள உறவை விட மறுத்ததால் ஆத்திரமடைந்த அருண்பாண்டியன் தனது நண்பர்களுடன் சேர்ந்து நரேஷை கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து கொலையாளிகளான அருண்பாண்டியன் மற்றும் அவரது நண்பர்களை போலீசார் வலைவீசி தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் கொலை வழக்கில் அருண்பாண்டியன், அவரது நண்பர்கள் திலீப் என்ற அஜீத் (27), அருண் (27), சஞ்சய் (27) ஆகிய 4 பேர் எழும்பூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
மற்றொரு சம்பவம்
அதேபோல் சென்னையை அடுத்த கீழ்கட்டளை பாக்கியம்மாள் தெருவை சேர்ந்தவர் ரத்னம் (வயது 50). தச்சர். இவர் அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்த சென்றுள்ளார். அப்போது, அவருக்கும் அமீர் (45) என்பவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ரத்னத்தை பலமாக தாக்கி விட்டு அமீர் தப்பி சென்றார். இதில் ரத்தினத்தின் அடிவயிற்றில் பலமாக அடிப்பட்டதில், அவர் பரிதாபமாக இறந்து போனார். இது தொடர்பாக மடிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலைக்கு காரணமான அமீரை தேடி வருகின்றனர்.