பயிர் காப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும் தென்காசி கலெக்டரிடம் விவசாயிகள் மனு

கடந்த ஆண்டுக்கான பயிர் காப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும் என்று தென்காசி கலெக்டரிடம் விவசாயிகள் மனு வழங்கினர்

Update: 2022-03-21 22:52 GMT
தென்காசி:
கடந்த ஆண்டுக்கான பயிர் காப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும் என்று தென்காசி கலெக்டரிடம் விவசாயிகள் மனு வழங்கினர்.
கூட்டம்
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.
இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதி, பட்டா மாறுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் கேட்டு பொதுமக்கள் மனுக்கள் வழங்கினர். அவற்றுக்கு தீர்வு காணுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
காப்பீட்டுத்தொகை
தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் டிராக்டர் ஓட்டுனர் அனைத்து தொழிலாளர்கள் நலச்சங்க தென் மண்டல அமைப்பு செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு வழங்கினர்.
அதில், ‘‘2020- 2021-ம் ஆண்டில் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத்தொகை இதுவரை வழங்கப்படவில்லை. விவசாயிகள் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இருப்பதால் அவர்களுக்கு உடனடியாக பயிர் காப்பீட்டுத்தொகை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இலவச பஸ் பயணம்
இந்து தேசிய கட்சியினர் மாவட்ட செயல் தலைவர் பிச்சுமணி தலைமையில் கலெக்டரிடம் வழங்கிய மனுவில், ‘‘தமிழகத்தில் அரசு டவுன் பஸ்களில் பெண்களுக்கான இலவச பயணத்தை உறுதி செய்துள்ளது. அதேபோன்று வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து ஏழை ஆண்களுக்கும் அரசு பஸ்களில் இலவச பயணம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.
கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றவும், நலத்திட்ட உதவிகள் கேட்டும் 297 மனுக்களை வழங்கினர்.

மேலும் செய்திகள்