சேலம் அரசு ஆஸ்பத்திரியில் 24 மணி நேரம் செயல்பட்டகொரோனா வழிகாட்டுதல் மையம் தற்காலிகமாக மூடப்பட்டது

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் 24 மணி நேரம் செயல்பட்டு வந்த கொரோனா வழிகாட்டுதல் மையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

Update: 2022-03-21 22:35 GMT
சேலம்:
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் 24 மணி நேரம் செயல்பட்டு வந்த கொரோனா வழிகாட்டுதல் மையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
வழிகாட்டுதல் மையம்
சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகும் நபர்களுக்கு பாதிப்பு தன்மை குறித்து தெரிந்து கொள்ளவும், அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளிப்பதா? அல்லது வீட்டு தனிமையில் சிகிச்சை அளிப்பதா? என்பதை தெரிந்து கொள்ளவும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் 24 மணி நேர கொரோனா வழிகாட்டுதல் மையம் அமைக்கப்பட்டது.
கொரோனா 2-வது அலையின் தாக்கம் அதிகமாக இருந்த நேரத்தில் இந்த மையம் மூலம் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு டாக்டர்கள் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும், நோய் தொற்று உறுதியானவர்களுக்கு ஆஸ்பத்திரியில் சி.டி.ஸ்கேன் பரிசோதனை மேற்கொண்டு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.
தற்காலிகமாக மூடல்
இந்தநிலையில், சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு முற்றிலும் குறைந்து வருகிறது. இதனால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தொடங்கப்பட்ட 24 மணி நேர கொரோனா வழிகாட்டுதல் மையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதற்கு பதில் ஆஸ்பத்திரி வளாகத்தில் எம்.ஆர்.ஐ.ஸ்கேன் கட்டிடத்தின் அருகே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அங்கு நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு நோயாளிகள் வந்தால், அவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு, தடுப்பூசி போட்டு இருக்கிறார்களா? ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வேண்டுமா? அல்லது வீட்டு தனிமையில் இருந்து மருந்துகளை எடுத்து கொண்டால் போதுமா? என்பது குறித்து மருத்துவ குழுவினர் ஆலோசனை வழங்குவார்கள் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
நோய் தொற்று குறைவு
இது குறித்து அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் கூறுகையில், சேலம் மாவட்டத்தில் தினமும் ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த ஒரு வாரமாக நோய் தொற்று பாதிப்பு மிகவும் குறைவாக உள்ளது. மேலும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இதனால் 24 மணி நேரமும் செயல்பட்டு வந்த கொரோனா வழிகாட்டுதல் மையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கொரோனா நோயாளிகள் ஒருவர் கூட சிகிச்சையில் இல்லை என்று பூஜ்ஜிய நிலை குறித்த தகவல் விரைவில் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, என்றனர்.

மேலும் செய்திகள்