சுரண்டை அருகே வைக்கோல் படப்புகள் தீயில் எரிந்து நாசம்
வைக்கோல் படப்புகள் தீயில் எரிந்து நாசம் ஆனது
சுரண்டை:
சுரண்டை அருகே சாம்பவர்வடகரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வைக்கோல் படப்புகள் விவசாயிகளால் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. நேற்று இரவு 8.30 மணியளவில் வைக்கோல் படப்புகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனே அங்கிருந்த பொதுமக்கள் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். கடையநல்லூர், ஆலங்குளம், சுரண்டை ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து தீயணைப்பு பணியில் ஈடுபட்டன. ஆனாலும் வைக்கோல் படப்புகள் தீயில் எரிந்து நாசம் ஆனது. அருகில் குடியிருப்பில் பரவிய தீயில் 2 பசுமாடுகள் சிக்கி இறந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும் பல மாடுகள் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகத்திற்கு அழைத்து செல்லப்பட்டு கட்டப்பட்டு உள்ளது. தீயினால் ஏற்பட்ட மொத்த சேத மதிப்பு ரூ.15 லட்சத்திற்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.