சேலத்தில் ரூ.10 கோடி நிலம் மோசடி; அ.தி.மு.க. பிரமுகர் கைது
சேலத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான நிலத்தை மோசடி செய்து விற்றதாக அ.தி.மு.க. பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
சேலம்:
சேலத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான நிலத்தை மோசடி செய்து விற்றதாக அ.தி.மு.க. பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
வடமாநிலத்தை சேர்ந்தவர்
மத்திய பிரதேச மாநிலம் மான்சூர் அருகே குந்தி கிராமத்தை சேர்ந்தவர் துர்கா சங்கர் தாக்கத் (வயது 56). இவர் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று கொடுத்தார். அதில், தனக்கு சொந்தமாக ஏற்காட்டில் 1 ஏக்கர் 4 சென்ட் நிலம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த நிலத்தை விற்று கொடுக்கும்படி சேலம் தாசநாயக்கன்பட்டி சவுடாம்பிகா நகரை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரும், சேலம் மாநகர அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளருமான சுகுமார் (70) என்பவரிடம் கூறி இருந்தேன்.
மேலும் அந்த நிலத்துக்கான பத்திரத்தை அவரிடம் கொடுத்துவிட்டு நான் மத்திய பிரதேசம் சென்றுவிட்டேன். இந்த நிலையில் சுகுமார் போலியாக அவருடைய பெயருக்கு அந்த நிலத்தை பத்திர பதிவு செய்து விற்றுவிட்டார். எனவே மோசடி செய்த அவர் மீது நடவடிக்கை எடுத்து தனது நிலத்தை மீட்டு தர வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
ரூ.10 கோடி நிலம்
இதுகுறித்து விசாரணை நடத்த நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசாருக்கு கமிஷனர் நஜ்முல் ஹோடா உத்தரவிட்டார். அதன்பேரில் போலீஸ் உதவி கமிஷனர் செல்வராஜ் மற்றும் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் ஆகியோர் விசாரணை நடத்தினர். அதில், அ.தி.மு.க. பிரமுகரான சுகுமார், மத்திய பிரதேசத்தை சேர்ந்த துர்கா சங்கர் தாக்கத் என்பவருடைய 1.4 ஏக்கர் நிலத்தை போலியாக தனது பெயருக்கு மாற்றி பின்னர் அதை 8 பேருக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
இந்த நிலத்தின் மதிப்பு ரூ.10 கோடி ஆகும். இதையடுத்து சுகுமார் மற்றும் அந்த நிலத்தை வாங்கிய 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் நேற்று சுகுமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரை சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.