பர்கூரில் மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு- நண்பர் படுகாயம்

பர்கூரில் மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார். நண்பர் படுகாயம் அடைந்தார்.

Update: 2022-03-21 22:18 GMT
அந்தியூர்,

பர்கூரில் மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார். நண்பர் படுகாயம் அடைந்தார்.

வாலிபர்

அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதி துருசனாம்பாளையம் மலை கிராமத்தை சேர்ந்தவர் மாதேவன். அவருடைய மகன் பொம்மேஸ் (வயது 20). அதே பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (16). இவர் பொம்மேசின் நண்பர் ஆவார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பொம்மேசும், ஜெயக்குமாரும் பர்கூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அருகே உள்ள ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு மோட்டார்சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

விபத்தில் சாவு

மோட்டார்சைக்கிளை பொம்மேஸ் ஓட்டினார். அவருக்கு பின்னால் ஜெயக்குமார் அமர்ந்திருந்தார். அப்போது ரோட்டோரத்தில் மழைநீர் தேங்கியிருந்த குண்டும் குழியுமான இடத்தில் நிலைதடுமாறி மோட்டார்சைக்கிளில் இருந்து பொம்மேசும், ஜெயக்குமாரும் கீழே விழுந்தனர்.

இந்த விபத்தில் பொம்மேஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஜெயக்குமார் படுகாயம் அடைந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் பர்கூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பொம்மேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த ஜெயக்குமார் அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த பொம்மேசின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

மேலும் செய்திகள்