சத்தி அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவிலில் இன்று குண்டம் விழா- தீ மிதிக்க வரிசையில் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்

சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழா இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. தீ மிதிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் காத்திருக்கிறார்கள்.

Update: 2022-03-21 22:17 GMT
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழா இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. தீ மிதிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் காத்திருக்கிறார்கள். 
பண்ணாரி அம்மன்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ளது பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில். இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த விழாவில் ஈரோடு, கோவை, சேலம், ஊட்டி மற்றும் கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களை சேர்ந்த சுமார் 5 லட்சம் பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள்.
இந்த ஆண்டு விழாவுக்காக கடந்த 8-ந் தேதி இரவு பூச்சாட்டப்பட்டது. அன்று முதல் பண்ணாரி அம்மன், சருகு மாரியம்மன் சிலை சப்பரத்தில் வைக்கப்பட்டு வீதிஉலா நடந்தது. 15-ந் தேதி இரவு கம்பம் சாட்டு விழா நடந்தது. அன்று முதல் இந்த கம்பத்தை சுற்றி கடந்த 20-ந் தேதி வரை ஒவ்வொரு நாள் இரவும் மலைவாழ் மக்கள் பீனாட்சி வாத்தியத்திற்கு ஏற்ப நடனம் ஆடி மகிழ்ந்தார்கள்.
குண்டம் விழா
மேலும் குண்டம் பற்ற வைக்க பக்தர்கள் காணிக்கையாக வேம்பு மற்றும் ஊஞ்ச மரங்களை கொண்டு வந்து கோவில் முன்பு குவியலாக போட்டுள்ளார்கள். இதைத்தொடர்ந்து முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதையொட்டி இரவு 2 மணி அளவில் தெப்பக்குளம் சென்று அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நடைபெறும். அதன்பின்னர் அங்கு அனைவரும் புனித நீராடிவிட்டு வேப்பிலையை கையில் ஏந்தியபடி தாரை தப்பட்டை முழங்க குண்டம் இறங்கும் பகுதிக்கு வருகிறார்கள்.
குண்டத்துக்கு பூசாரி முதலில் பூஜை செய்து தீ மிதிப்பார். அவரை தொடர்ந்து பக்தர்கள் மதியம் 2 மணி வரை தீ மிதிக்கிறார்கள். நாளை (புதன்கிழமை) புஷ்ப ரதம் கோவிலை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சியும், நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழாவும், 25-ந் தேதி திருவிளக்கு பூஜையும் நடக்கிறது. 28-ந் தேதி நடக்கும் மறுபூஜையுடன் திருவிழா முடிவடைகிறது.
மாட்டு வண்டிகளில்...
பண்ணாரி அம்மன் குண்டம் விழாவை காண சுற்று வட்டார கிராமங்களில் இருந்து பக்தர்கள் மாட்டு வண்டிகளில் குடும்பத்துடன் வருவார்கள். ஆனால் இந்த ஆண்டு மாட்டு வண்டிகளில் வரக்கூடாது என தடை விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பக்தர்கள் நாங்கள் பரம்பரை பரம்பரையாக மாட்டு வண்டிகளில்தான் பண்ணாரி அம்மன் கோவிலுக்கு வந்து செல்கிறோம். அதனால் வழக்கம்போல் எங்களுக்கு மாட்டு வண்டிகளில் வர அனுமதி வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள். அதை ஏற்று மாட்டுவண்டிகளில் பக்தர்கள் வர அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து ஏராளமான பக்தர்கள் மாட்டு வண்டிகளில் வந்து கோவில் அருகே உள்ள காலி இடங்களில் தங்கியுள்ளார்கள். 
பாதுகாப்பு
பண்ணாரி கோவிலில் குண்டம் இறங்குபவர்கள் வழக்கமாக 4 அல்லது 5 நாட்களுக்கு முன்னதாகவே வந்து தங்கிக்கொள்வார்கள். ஆனால் இந்த ஆண்டு குண்டம் விழாவுக்கு 2 நாட்களுக்கு முன்புதான் பக்தர்கள் வரிசையில் வந்து தங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. அதனால் நேற்று முன்தினம் முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் வந்து இடம் பிடித்து குண்டம் இறங்க காத்திருக்கிறார்கள். 
இதேபோல் குண்டம் திருவிழாவையொட்டி போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. கோவிலைச் சுற்றி பல்வேறு பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். 

மேலும் செய்திகள்