உக்ரைனில் ரஷியாவின் தாக்குதலில் பலியான மாணவர் நவீன் உடல் சொந்த ஊர் வந்தது
உக்ரைனில் ரஷியாவின் தாக்குதலில் பலியான கர்நாடக மாணவர் நவீனின் உடல் 20 நாட்களுக்கு பிறகு நேற்று சொந்த ஊர் வந்தது. அவரது உடலுக்கு முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை உள்பட ஏராளமானோர் நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் நவீனின் உடல் மருத்துவ ஆராய்ச்சிக்காக தானமாக வழங்கப்பட்டது
பெங்களூரு: உக்ரைனில் ரஷியாவின் தாக்குதலில் பலியான கர்நாடக மாணவர் நவீனின் உடல் 20 நாட்களுக்கு பிறகு நேற்று சொந்த ஊர் வந்தது. அவரது உடலுக்கு முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை உள்பட ஏராளமானோர் நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் நவீனின் உடல் மருத்துவ ஆராய்ச்சிக்காக தானமாக வழங்கப்பட்டது.
மாணவர் நவீன் சாவு
இதையடுத்து உக்ரைனில் இருந்து விமான சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன. இதனால் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாய்நாட்டிற்கு திரும்ப முடியாமல் சிக்கி தவித்தனர். அவர்களை மத்திய அரசு சிறப்பு விமானங்கள் மூலம் மீட்கும் பணியை ‘ஆபரேஷன் கங்கா' என்ற பெயரில் மேற்கொண்டது.
இந்த நிலையில் கார்கிவ் நகரில் சிக்கிய கர்நாடக மருத்துவ மாணவர்கள் அங்குள்ள பதுங்கு குழியில் தங்கி இருந்தனர். அதில் ஹாவேரி மாவட்டம் ராணிபென்னூர் தாலுகா சலகேரி கிராமத்தை சேர்ந்த மருத்துவ மாணவர் நவீன் (வயது 22) கடந்த 1-ந் தேதி காலையில் உணவு பொருட்களை வாங்க கடைக்கு வந்து வரிசையில் நின்று இருந்தார். அப்போது ரஷியாவின் ஏவுகணை தாக்குதலில் படுகாயம் அடைந்த அவர் உயிரிழந்தார்.
20 நாட்களுக்கு பிறகு...
அவரது உடல் ரசாயனங்கள் மூலம் பதப்படுத்தப்பட்டு அங்குள்ள சவக்கிடங்கில் வைக்கப்பட்டு இருந்தது. நவீனின் உடலை இறுதியாக ஒரு தடவையாவது பார்க்க வேண்டும் என்று அவரது பெற்ேறாரும், உறவினர்களும் கண்ணீர்மல்க மத்திய, மாநில அரசுகளுக்கு கண்ணீர் வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து நவீனின் உடலை தாய்நாட்டிற்கு கொண்டுவர கர்நாடக அரசு மத்திய அரசு மூலம் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டது.
மத்திய அரசின் முயற்சியின் பலனாக நவீனின் உடல் கார்கிவ் நகரில் இருந்து போலந்து நாட்டின் வர்சாவ் நகருக்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து துபாய் வழியாக 20 நாட்களுக்கு பிறகு விமானம் மூலம் நேற்று தாய்நாட்டிற்கு அதாவது கர்நாடகத்திற்கு அவரது உடல் கொண்டு வரப்பட்டது.
விமான நிலையத்தில் அஞ்சலி
அவரது உடலை எடுத்து வந்த விமானம் நேற்று அதிகாலை 3 மணிக்கு பெங்களூரு ேதவனஹள்ளியில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தை வந்து அடைந்தது. அப்போது அங்கு இருந்த முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் நவீனின் குடும்பத்தினர், நவீனின் உடலை பெற்றுக்கொண்டனர்.
அங்கேயே அவரது உடலுக்கு பசவராஜ் பொம்மை மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். சுகாதாரத்துறை மந்திரி சுதாகர், சிவக்குமார் உதாசி எம்.பி., காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சலீம் அகமது எம்.எல்.சி., இயற்கை பேரிடர் நிர்வாக ஆணைய கமிஷனர் மனோஜ் ராஜன் உள்ளிட்டோரும் அங்கு இருந்தனர்.
இறுதி அஞ்சலி
அதைத்தொடர்ந்து அங்கிருந்து நவீனின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் ஹாவேரி மாவட்டம் ராணிபென்னூர் தாலுகா சலகேரி கிராமத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்குள்ள அவரது வீட்டில் நவீனின் உடல் வைக்கப்பட்டது. அங்கு மகனின் உடலை பார்த்து தந்தை சேகரப்பா மற்றும் தாய் விஜயலட்சுமி, சகோதரர் ஹர்ஷா மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர்.
அவர்களை உறவினர்கள் ஆறுதல் கூறி தேற்றினர். அங்கு குடும்பத்தினர், உறவினர்கள், உடன் படித்தவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் திரண்டு வந்து கண்ணீர் மல்க நவீனின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
ஆறுதல்
குறிப்பாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஹாவேரிக்கு நேரில் சென்று நவீனின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். பின்னர் நவீனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது நவீனின் தாய் விஜயலட்சுமி கதறி அழுதார்.
அவருக்கு கட்டியணைத்து பசவராஜ்பொம்மை ஆறுதல் கூறினார். மேலும் நவீனின் உடலை தாயகம் கொண்டுவர நடவடிக்கை எடுத்த பிரதமர் மோடிக்கும், மாநில அரசுக்கும் நவீனின் குடும்பத்தினர் முதல்-மந்திரியிடம் கைகூப்பி நன்றி தெரிவித்தனர்.
உடல் தானம்
அதைத்தொடர்ந்து மாணவர் நவீன் உடலுக்கு அவரது பெற்றோர் லிங்காயத் முறைப்படி இறுதிச்சடங்குகள் மேற்கொண்டனர். இதில் மடாதிபதி வச்சானந்தா சுவாமி தலைமையில் இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டது.
மருத்துவம் படித்து மகன் டாக்டராக வருவான் என்ற கனவோடு இருந்த சேகரப்பா-விஜயலட்சுமி தம்பதி, உக்ரைன் போரில் மகன் கொல்லப்பட்டதால், அவரது உடலை தாவணகெரேயில் உள்ள சாமனூர் சிவசங்கரப்பா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவ ஆராய்ச்சிக்காக தானமாக வழங்க முடிவு செய்திருந்தனர்.
பிரியாவிடை
அதன்படி நேற்று மதியம் 2 மணி அளவில் நவீனின் உடல் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு, தாவணகெரேக்கு புறப்பட்டது. அப்போது நவீனின் குடும்பத்தினரும், உறவினர்களும், கிராம மக்களும் கண்ணீர் மல்க மலர் தூவி நவீனின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி பிரியாவிடை அளித்தனர். இது காண்போரின் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
அதையடுத்து ஆம்புலன்சில் நவீனின் உடல் தாவணகெரேக்கு மதியம் 3 மணிக்கு வந்தடைந்தது. நவீனின் உடல் எடுத்துவரப்பட்ட வழிநெடுகிலும் ஜூரோ போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்பட்டு இருந்தது. பின்னர் சாமனூர் சிவசங்கரப்பா மருத்துவமனைக்கு நவீனின் உடல் தானமாக வழங்கப்பட்டது. அதற்கான சான்றிதழும் நவீனின் உறவினர்களிடம் வழங்கப்பட்டது.
பேட்டி
முன்னதாக விமான நிலையத்தில் உடலை பெற்றுக்கொண்ட பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
உக்ரைன் போரில் மாணவர் நவீன் உயிரிழந்தது துரதிர்ஷ்டமானது. தனது மகனின் உடலை கொண்டுவர வேண்டும் என்று அவரது தாயார் கண்ணீர் விட்டு கதறி அழுதார். போர் களத்தில் இருந்து அவரது உடலை கொண்டு வருவது கடினம் என்று நாங்கள் தொடக்கத்தில் நினைத்தோம். ஆனால் தீவிர முயற்சியின் காரணமாக அவரது உடல் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதிசயமான நிகழ்வு
பிரதமர் மோடி மற்றும் அவரது ராஜதந்திர பலம் மற்றும் அவருக்கு உள்ள செல்வாக்கு ஆகியவற்றின் காரணமாக நவீனின் உடல் தாய்நாட்டிற்கு கொண்டுவர முடிந்தது. நவீனின் உடலை கொண்டுவரவும், அங்கு சிக்கி இருந்த மாணவர்களை பத்திரமாக அழைத்து வந்ததற்காகவும் பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
பெரும்பாலான நேரங்களில் போர் களத்தில் இறக்கும் ராணுவ வீரர்களின் உடல்களை கொண்டுவர முடிவது இல்லை. அதனால் நவீனின் உடலை கொண்டு வருவது முடியாத காரியமாக இருந்தது. ஆனால் நவீனின் உடல், அயல் நாட்டின் போர் களத்தில் இருந்து கொண்டு வந்தது என்பது ஒரு அதிசயமான நிகழ்வு ஆகும். அவரது உடலை தாவணகெரேயில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்க பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
பிரதமர் மோடிக்கு நன்றி
உக்ரைனில் ரஷியாவின் தாக்குதலில் கர்நாடக மாணவர் நவீன் உயிரிழந்தார். அவரது உடல் நேற்று சொந்த ஊர் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து பிரதமர் மோடியை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி நன்றி தெரிவித்தார்.
பசவராஜ் பொம்மை பேசும்போது, ‘‘நவீனின் உடலை தாய்நாட்டிற்கு கொண்டு வந்ததில் உங்களின் பங்கு மிக முக்கியமானது.
கடைசியாக ஒருமுறை தனது மகனின் முகத்தை பார்க்க வேண்டும் என்று பெற்றோர் விரும்பினர். அவர்களின் கனவை நீங்கள் நனவாக்கி இருக்கிறீர்கள். கர்நாடகம் சார்பில் உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். இது அசாதாரண பணி. அதை நீங்கள் செய்துள்ளீர்கள். போர் களத்தில் இருந்து இறந்தவரின் உடலை கொண்டு வருவது அவ்வளவு சுலபமானது அல்ல'' என்றார். இந்த தொலைபேசி உரையாடல் சில நிமிடங்கள் நீடித்தன.