கோலார் தங்கவயல் பிரசன்ன லட்சுமி வெங்கடரமணசுவாமி கோவிலில் பிரமோற்சவ விழாவையொட்டி இன்று புஷ்ப பல்லக்கு
கோலார் தங்கவயல் பிரசன்ன லட்சுமி வெங்கடரமணசுவாமி கோவிலில் பிரமோற்சவ விழாவையொட்டி இன்று புஷ்ப பல்லக்கு ஊர்வலம் நடக்கிறது. புஷ்ப பல்லக்கு ஊர்வலம் இரவு 11 மணிக்கு தொடங்குகிறது
கோலார் தங்கவயல்: கோலார் தங்கவயல் பிரசன்ன லட்சுமி வெங்கடரமணசுவாமி கோவிலில் பிரமோற்சவ விழாவையொட்டி இன்று புஷ்ப பல்லக்கு ஊர்வலம் நடக்கிறது. புஷ்ப பல்லக்கு ஊர்வலம் இரவு 11 மணிக்கு தொடங்குகிறது.
பிரசன்ன லட்சுமி வெங்கடரமணசுவாமி கோவில்
கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் ராபர்ட்சன்பேட்டையில் பிரசன்ன லட்சுமி வெங்கடரமணசுவாமி கோவில் அமைந்துள்ளது. தங்கம் விளையும் பூமி என்று வர்ணிக்கப்படும் கோலார் தங்கவயலில் அமைந்துள்ள இக்கோவில் மிகவும் பிரசித்திபெற்றது. ஆண்டுதோறும் இக்கோவிலில் பிரமோற்சவ விழா வெகுவிமரிசையாக நடத்தப்படுவது வழக்கம்.
இந்த திருவிழா 10 நாட்கள் கோலாகலமாக நடத்தப்படும்.
இந்த திருவிழாவில் தமிழகத்தின் வேலூர், திருப்பத்தூர், ஆம்பூர், ஆந்திர மாநிலத்தின் குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.
பிரமோற்சவ விழா
கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இக்கோவிலில் பிரமோற்சவ விழா பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடந்தது. இதையடுத்து இந்த ஆண்டுக்கான பிரமோற்சவ விழாவை நடத்த மாவட்ட நிர்வாகமும், அரசும் அனுமதி அளித்தது. அதன்பேரில் இந்த ஆண்டுக்கான பிரமோற்சவ விழா கடந்த 12-ந் தேதி தொடங்கியது.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமூகத்தினரின் தேர் ஊர்வலம் நடத்தப்படுவது இங்கு மிகவும் சிறப்பானதாகும். பிரமோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான புஷ்ப பல்லக்கு ஊர்வலம் இன்று(செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இது 87-வது புஷ்ப பல்லக்கு ஊர்வலம் ஆகும்.
2 டன் பூக்கள்
புஷ்ப பல்லக்கை ஜோடிப்பதற்காக ஆம்பூர், வேலூர், குப்பம் ஆகிய பகுதிகளில் இருந்து பூக்கள் கொண்டு வரப்படுகிறது. சுமார் 2 டன் பூக்களைக் கொண்டு புஷ்ப பல்லக்கு ஜோடிக்கப்படும்.
2 டன் பூக்களுடன் மொத்தம் 5 முதல் 6 டன் அளவிலான பல்லக்கை, 250 பேர் முதல் 300 வரை தோள்களில் சுமந்து செல்லும் காட்சி கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.
போலீஸ் பாதுகாப்பு
இன்று நடைபெறும் புஷ்ப பல்லக்கு ஊர்வலத்தை முன்னிட்டு கோவிலில் காலை முதலே சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள், பூஜைகள், அன்னதானம் உள்ளிட்டவை நடைபெறும். இரவு 11 மணிக்கு புஷ்ப பல்லக்கு ஊர்வலம் தொடங்கும். இந்த பிரமோற்சவ விழாவால் கோலார் தங்கவயல் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகள் கோலார் தங்கவயல் முதலியார் சங்கம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.