பள்ளி தலைமை ஆசிரியர் முன்ஜாமீன் கேட்டு மனு

ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வழக்கில் பள்ளி தலைமை ஆசிரியர் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து போலீசார் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2022-03-21 20:56 GMT
மதுரை
ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வழக்கில் பள்ளி தலைமை ஆசிரியர் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து போலீசார் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
பாலியல் தொந்தரவு
மதுரை முனிச்சாலையில் உள்ள தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோசப் ஜெயசீலன், ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், எங்கள் பள்ளியில் பணியாற்றிய 2 ஆசிரியைகளை தற்காலிகமாக இடமாற்றம் செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தொடர்ச்சியாக பாலியல் தொந்தரவு செய்வதாக, ஆசிரியைகள் புகார் அளித்ததன் அடிப்படையிலேயே அவர்களை வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டனர் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, 2 பெண் ஆசிரியைகளும் அனுப்பிய புகார் கடிதத்தின் அடிப்படையில் கீரைத்துறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, விசாரணையை உடனடியாக தொடங்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
முன் ஜாமீன்
அதன்பேரில் மகளிர் போலீசார் ஜோசப் ஜெயசீலன் மீது வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கேட்டு அவர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
அதில், முதல் தகவல் அறிக்கையில் கூறியிருப்பது போல எந்த சம்பவமும் நடக்கவில்லை. முதல் கட்ட விசாரணை நடத்தாமல் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே முன் ஜாமீன் வழங்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த முன் ஜாமீன் மனு குறித்து மதுரை மாநகர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பதில் அளிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்