ராகு-கேது பெயர்ச்சியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு

ராகு-கேது பெயர்ச்சியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

Update: 2022-03-21 20:53 GMT
பெரம்பலூர்:

சிறப்பு வழிபாடு
ராகு-கேது பெயர்ச்சியையொட்டி நேற்று கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் பெரம்பலூரில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் ராகு-கேது பெயர்ச்சியையொட்டி நவக்கிரக சன்னதியில் உள்ள ராகு-கேது பகவான் உள்ளிட்ட நவக்கிரக மூர்த்திகளுக்கு இளநீர், பால், பன்னீர், சந்தனம், பழவகைகள் மற்றும் வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகளும் நடந்தது.
இதைத்தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜைகளை திருச்செங்கோடு சுவாமிநாத சிவாச்சாரியார் மற்றும் கோவில் அர்ச்சகர் கவுரிசங்கர் செய்தனர். இதில் முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
அபிஷேகம்
இதேபோல் பெரம்பலூர் காய்கறி மார்க்கெட் தெருவில் கச்சேரி விநாயகர் கோவிலில் நவக்கிரக சன்னதியில் உள்ள ராகு-கேது பகவானுக்கு அபிஷேகங்களும், மகா தீபாராதனையும் நடந்தது. இதில் மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் புறநகர் திருமங்கலத்தில் உள்ள மீனாட்சி சமேத சொக்கநாதர் கோவிலில் ராகு-கேது பெயர்ச்சியை முன்னிட்டு நவக்கிரகங்களுக்கு அபிஷேகங்களும், மகா தீபாராதனையும் நடந்தது. பெரம்பலூரை அடுத்த குரும்பலூரில் உள்ள பஞ்சநதீஸ்வரர் கோவிலில் ராகு-கேது பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள், மகா தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்