பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
பெரம்பலூர்:
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது ஆலத்தூர் தாலுகா, பாடாலூர் ஊராட்சிக்கு உட்பட்ட திருவிளக்குறிச்சி, பெருமாள்பாளையம் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு 3 மனுக்களை கொடுத்தனர்.
அதில், திருவிளக்குறிச்சி மேல் ஏரிக்கு ராஜா மலையில் உள்ள ஓடை தான் முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. அதில் உள்ள கல்குவாரியினால் ஏரிக்கு தண்ணீர் வருவதில்லை. அங்கு பள்ளத்தில் தேங்கும் தண்ணீரை கல்குவாரிக்கு பயன்படுத்திவிட்டு, கழிவுநீரை ஓடையில் விடுகின்றனர். இதனால் ஏரியில் கழிவுநீர் கலந்து விடுவதால் விவசாயமும், அதில் உள்ள குடிநீர் கிணறும் பாதிக்கப்படுகிறது. எனவே அந்த கல்குவாரியின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். இதேபோல் திருவிளக்குறிச்சி கீழ் ஏரிக்கு தண்ணீர் செல்லக்கூடிய ஓடையில் கல்குவாரி நடத்துவதற்கு அனுமதி வழங்கிய உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.
முடி திருத்தும் தொழிலாளர்கள் மனு
பெருமாள்பாளைத்தில் பெருமாள் மலை கிரிவல பாதை அருகே குடிநீர் கிணறு உள்ளது. அதனருகே இருக்கும் கிரஷரில் இருந்து வரும் புகை மற்றும் துகள்கள் போன்றவை படிவதால் கிணறு மாசுபடுகிறது. மேலும் அருகே இருக்கும் கல்குவாரியினால் குடிநீர் பிரச்சினை ஏற்படுகிறது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது. இதையடுத்து அவர்களில் சிலர் சென்று கலெக்டரை சந்தித்து மனு கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.
பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர் நல சங்கத்தினர் கொடுத்த மனுவில், முடி திருத்தும் நிலையங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களில் சிலர் பிரச்சினை செய்து வருகின்றனர். முடி திருத்தும் சமுதாய மக்கள் மீது சாதி பாகுபாடுகள் திணிக்கப்படுகிறது. எனவே முடிதிருத்தும் தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்க்கவும், பாதுகாப்பு கொடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
சுடுகாட்டிற்கு பாதை கேட்டு...
எறையசமுத்திரம் கிழக்கு தெருவில் வசிக்கும் பொதுமக்கள் கொடுத்த மனுவில், ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்த எங்களுக்கு ஒதுக்கப்பட்ட சுடுகாட்டிற்கு பாதை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது நீதிமன்றத்தில் வழக்கு உள்ள இடத்தை விட்டுவிட்டு மீதமுள்ள பாதையை அளந்து கல் நட வேண்டும் என்று கூறியிருந்தனர்.
கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைள் அடங்கிய மொத்தம் 242 மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், அந்த மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, அதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு, தகுதியான அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் விரைவாக சென்றடையுமாறு பணியாற்றிட வேண்டும் என்று அரசுத்துறை அலுவலர்களை அறிவுறுத்தினார். மேலும் சமூக நலத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு இலவச தையல் எந்திரங்களையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் விலையில்லா திட்டத்தின் மூலம் 17 பேருக்கு உபகரணங்களையும் கலெக்டர் வழங்கினார்.