6 வயது வரையிலான குழந்தைகளுக்கு எடை-உயரம் கணக்கெடுக்கும் பணி

6 வயது வரையிலான குழந்தைகளுக்கு எடை-உயரம் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

Update: 2022-03-21 20:52 GMT
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட ஒருங்கினைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் சரிவிகித உணவின் அவசியம் குறித்த போஷன் பக்வாடா முகாம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. முகாமினை கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தொடங்கி வைத்தார். முகாமில் ஆரோக்கியமான் குழந்தைகளை கண்டறியும் நோக்கத்தில் பிறந்தது முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு எடை மற்றும் உயரம் கணக்கெடுக்கும் பணிகள் நடந்ததை கலெக்டர் பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில், மேற்கண்ட முகாம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 4-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முகாமின் முதல் வாரமான வருகிற 27-ந்தேதி வரை, பிறந்தது முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு எடை மற்றும் உயரம் கணக்கெடுக்கும் பணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. குழந்தைகளின் பெற்றோர்கள் அருகில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு சென்று குழந்தைகளின் எடை மற்றும் உயரம் கண்டறிந்து அவர்களின் வளர்ச்சி நிலையை அறிந்து கொள்ள வேண்டும். மேலும், அரசு தொடக்க பள்ளிகள், தனியார் மழலையர் பள்ளிகள் மற்றும் பொது இடங்களிலும் எடை மற்றும் உயரம் கண்டறிய ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு முகாம்களை பெற்றோர்கள் தவறாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும், என்றார்.
முகாமின் 2-வது வாரத்தில் வருகிற 28, 29-ந்தேதிகளில் நீர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 30-ந்தேதி முதல் ஏப்ரல் 1-ந்தேதி வரை வளரிளம் பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு ரத்த பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வருகிற 2, 3-ந்தேதிகளில் பழங்குடியினர் பகுதிகளில் உள்ள ஆரோக்கியமான தாய் மற்றும் குழந்தைக்கான பாரம்பரிய உணவு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் உணவுப் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 4-ந்தேதி போஷன் பக்வாடா நிறைவு விழாவில் இம்முகாமில் நடத்திய நிகழ்ச்சிகளின் தொகுப்பு நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம்.

மேலும் செய்திகள்