திருச்சி அரசு மருத்துவமனையில் 45,746 பச்சிளம் குழந்தைகளுக்கு பிறவி குறைபாடு பரிசோதனை
திருச்சி அரசு மருத்துவமனையில் 45,746 பச்சிளம் குழந்தைகளுக்கு பிறவி குறைபாடு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக டீன் வனிதா கூறினார்.
திருச்சி
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 21-ந்தேதி, டவுன் சிண்ட்ரோம் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை, சிறப்பு சிசு சிகிச்சைப் பிரிவின் சார்பில் மேம்படுத்தப்பட்ட பிறவிக் குறைபாடு கண்டறியும் படிவத்தினை டீன் வனிதா வெளியிட்டார்.
அப்போது அவர் கூறுகையில், திருச்சி அரசு மருத்துவமனையில் 1.1.2017 முதல் 31.12.2021 வரை கடந்த 5 ஆண்டுகளில் 38,920 பிரசவங்கள் நடைபெற்றுள்ளன.
இதுவரை இங்குள்ள சிறப்பு சிசு சிகிச்சை பிரிவில் 45,746 குழந்தைகளுக்கு பிறவிக் குறைபாடுகள் கண்டறியும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், 1,165 குழந்தைகளுக்கு பல்வேறு பிறவி குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டு, ஆரம்ப நிலையிலேயே சரி செய்யப்பட்டது.
தொடர் கண்காணிப்பு
மேலும், மாவட்ட ஆரம்பநிலை இடையீட்டு மையம் மற்றும் பள்ளி சிறார் நடமாடும் குழுவினர் மூலமாக தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் அருண்ராஜ், குழந்தைகள் நலத்துறை தலைவர் சிராஜ்தீன் நசீர், சிறப்பு சிசு சிகிச்சைப் பிரிவு டாக்டர் செந்தில்குமார் உள்பட குழந்தைகள் நல மருத்துவர்கள் மற்றும் மகப்பேறு மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.