600 கிலோ ரேஷன் அரிசியை காரில் கடத்தியவர் கைது
600 கிலோ ரேஷன் அரிசியை காரில் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்
திருச்சி
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒய் ரோடு சந்திப்பில் சம்பவத்தன்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு காரை மறித்து போலீசார் சோதனை செய்த போது, அதில் 15 மூட்டைகளில் சுமார் 600 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து காரையும், ரேஷன் அரிசியையும் கைப்பற்றிய போலீசார், அவற்றை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அலாவுதீன் ஆகியோர் காரை ஓட்டி வந்த நபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை சேர்ந்த லோகநாதன் என்பவரின் மகன் கவின்குமார் (வயது 22) என்பதும், ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் ரேஷன் கடைகளில் ரேஷன் அரிசியை வாங்கி மண்ணச்சநல்லூரில் உள்ள அரவை மில்லில் விற்று வருவதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கவின்குமாரை கைது செய்த போலீசார், 600 கிலோ ரேஷன் அரிசி, கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.