ஆசிரியையிடம் மோசடி செய்யப்பட்ட ரூ.1.98 லட்சம் மீட்பு

ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ஆசிரியையிடம் மோசடி செய்யப்பட்ட ரூ.1.98 லட்சத்தை மாநகர் சைபர் கிரைம் போலீசார் மீட்டனர்.;

Update: 2022-03-21 19:39 GMT
திருச்சி
ஸ்ரீரங்கம் மேல உத்திரவீதியை சேர்ந்தவர் சாரநாதன். இவருடைய மனைவி விஜயலட்சுமி(வயது 53). இவர் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 14-ந் தேதி விஜயலட்சுமியின் செல்போனுக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்தது.
அதில், வங்கியில் அவருடைய தகவல்களை அப்டேட் செய்ய வேண்டும் என்றும், அதற்காக அனுப்பப்பட்டுள்ள குறுஞ்செய்தியை கிளிக் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையடுத்து விஜயலட்சுமி அந்த குறுஞ்செய்தியை கிளிக் செய்து அதில் கூறியுள்ளபடி ரகசிய குறியீட்டு எண்ணை உள்ளீடு செய்துள்ளார்.
ரூ.1.98 லட்சம் மோசடி
சிறிது நேரத்தில் அவருடைய வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1 லட்சத்து 98 ஆயிரத்து 707 எடுக்கப்பட்ட தகவல் வந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியை, இதுகுறித்து மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
முறைகேடாக நடைபெற்ற பண பரிவர்த்தனைகள் குறித்து, சம்பந்தப்பட்ட வங்கியின் சட்ட ஆலோசனை பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுத்ததன்பேரில் ஆசிரியை விஜயலட்சுமி வங்கி கணக்கிலிருந்து எடுக்கப்பட்ட ரூ.1.98 லட்சம் மீட்கப்பட்டது.

மேலும் செய்திகள்