வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் பலி

ஸ்ரீமுஷ்ணத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.;

Update: 2022-03-21 19:10 GMT
ஸ்ரீமுஷ்ணம், 

சிதம்பரம் தாலுகா மேல கீரப்பாளையம் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மனைவி தையல்நாயகி (வயது 57). இவர் நேற்று முன்தினம் ஸ்ரீமுஷ்ணம் எம்.ஜி.ஆர். நகரில் வசிக்கும் தனது உறவினரான மணிமேகலை என்பவர் வீட்டுக்கு சென்றார். அங்கு இரவு 9 மணி அளவில் சாப்பிட்டு விட்டு, வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். 
மணிமேகலை, தனது அண்ணன் உப்பு வியாபாரியான கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவரது கூரை வீட்டின் சுவர் திடீரென இடிந்து தூங்கிக் கொண்டிருந்த தையல்நாயகி மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மீது விழுந்தது. உடனே மணிமேகலையும், கிருஷ்ணமூர்த்தி மனைவியும் அலறியடித்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்தனர்.

பெண் பலி

இந்த சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கிய 2 பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் தையல்நாயகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த கிருஷ்ணமூர்த்தியை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீமுஷ்ணம் இன்ஸ்பெக்டர் பாண்டிச்செல்வி தலைமையிலான போலீசார் தையல்நாயகி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்