அமிர்தகடேஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழா முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம்

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழா முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் லலிதா தலைமையில் நடந்தது.

Update: 2022-03-21 18:44 GMT
மயிலாடுதுறை, 
மார்ச்.22-
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழா முன்னேற்பாடு குறித்த ஆலோசனை  கூட்டம் கலெக்டர் லலிதா தலைமையில் நடந்தது.
 குடமுழுக்கு விழா
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழா வருகிற 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த விழாவை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பல்வேறு துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் லலிதா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
திருக்கடையூர்  அமிர்தகடேஸ்வரர் கோவில்  குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்.
மருத்துவ முகாம்
குறிப்பாக போலீசார், பக்தர்களின் பாதுகாப்பினை உறுதி செய்து, சிரமமின்றி தரிசனம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். சுகாதாரம் மற்றும் மருத்துவத்துறை சார்பில் கோவில் வளாகத்தில் மருத்துவ முகாம் அமைக்க வேண்டும். 
உணவு பாதுகாப்பு துறை சார்பில் பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதான உணவுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும்.
கிருமிநாசினி தெளிக்க வேண்டும்
 தற்காலிக கழிப்பிட வசதிகளை ஏற்படுத்த வேண்டும். குப்பைகளை அகற்றி கிருமிநாசினி தெளிக்க வேண்டும். பக்தர்கள். கட்டாயம் முககவசம் அணிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முருகண்ணன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் முத்துராமன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் லாமேக் (சீர்காழி), வசந்தராஜ் (மயிலாடுதுறை) மற்றும் பல்வேறு துறை அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர். 
ஆய்வு
முன்னதாக, திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு, மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான பணிகளை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

மேலும் செய்திகள்