திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவிலில் ராகு கேது பெயர்ச்சி விழா

திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவிலில் ராகு- கேது பெயர்ச்சி விழா நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-03-21 18:20 GMT
குடவாசல்;
திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவிலில் ராகு- கேது பெயர்ச்சி விழா நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
சேஷபுரீஸ்வரர் கோவில்
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள திருப்பாம்புரத்தில் பிரசித்தி பெற்ற சேஷபுரீஸ்வரர் கோவில் உள்ளது. தென்காளகஸ்தி என அழைக்கப்படும் இந்த கோவில் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவார பாடல் பெற்ற தலங்களில் 59-வது தலமாக விளங்குகிறது. முற்காலத்தில் ஆதிசேஷன் தனது சாபத்தை போக்கிக்கொள்ள இறைவனை வேண்டினார். அப்போது இறைவன் மகா சிவராத்திரியன்று 3-வது காலத்தில் நடைபெறும் பூஜையில் இத்தல இறைவனை வணங்கி  சாப விமோசனம் அடைவாய் என வரம் அளித்த இடம் திருப்பாம்புரம் என வரலாறு கூறுகிறது. இதைப்போல ராகுவும் -கேதுவும் ஏக சரீரமாக இருந்து இத்தல இறைவனை இதயத்தில் வைத்து பூஜை செய்து சாப விமோசனம் பெற்றதாகவும் தல வரலாறு கூறுகிறது.
பரிகார பூஜை
பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் நேற்று மாலை 3.13 மணிக்கு ராகு -கேது பெயர்ச்சி விழா நடந்தது. ராகு பகவான் ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கும், கேது பகவான் விருச்சிக ராசியிலிருந்து துலாம் ராசிக்கும் இடம்பெயர்ந்தனர். இதை முன்னிட்டு ராகு -கேது பகவானுக்கு 1008 லிட்டர் பால், பன்னீர், தேன், திரவியம், சந்தனம், பஞ்சாமிர்தம், இளநீர் ஆகியவற்றால் அபிஷேகம் நடந்தது.  ராகு- கேது பெயர்ச்சி முடிந்தவுடன் கோவில் அருகே உள்ள வளாகத்தில் சிவாச்சாரியார்கள் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, துலாம், மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு சிறப்பு பரிகார பூஜை செய்தனர்.

மேலும் செய்திகள்