கறம்பக்குடியில் 2 மாணவிகளுக்கு டெங்கு காய்ச்சல் உறுதி கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்
கறம்பக்குடியில் பள்ளி மாணவிகள் 2 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொசு ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
கறம்பக்குடி:
2 மாணவிகளுக்கு டெங்கு காய்ச்சல்
கறம்பக்குடி பேரூராட்சி பகுதியில் கடந்த சில நாட்களாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கு காய்ச்சல் ஏற்பட்டு வந்தது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தும் வந்தது.
இந்நிலையில் கறம்பக்குடி கச்சேரிவீதி பகுதியை சேர்ந்த 2 பள்ளி மாணவிகளுக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அந்த மாணவிகள் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதை தொடர்ந்து கறம்பக்குடி பேரூராட்சி பகுதியில் டெங்கு ஒழிப்பு பணிகள் தீவிரபடுத்தபட்டு உள்ளன.
பொதுமக்களுக்கு எச்சரிக்கை
பேரூராட்சி பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் குழுவாக பிரிந்து பேருராட்சியில் உள்ள 15 வார்டுகளிலும் கொசு ஒழிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். வீடு வீடாக சென்று லார்வா கொசு புழுக்கள் உருவாகாத வண்ணம் எச்சரிக்கையாக இருக்கும்படி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கபட்டு உள்ளது. பேரூராட்சி சார்பில் வீதிகள் தோறும் கொசு மருந்து தெளிக்கப்படுகிறது. வீடுகளை சுற்றியும், வீதிகளிலும் தண்ணீர் தேங்கும் வகையில் உள்ள பொருட்களை பேரூராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். வீடுகளில் தண்ணீரை மூடிவைத்து பயன்படுத்தும்படியும், தண்ணீர் தொட்டிகள் மற்றும் பாத்திரங்களை அடிக்கடி கிருமிநாசினி கொண்டு கழுவி பயன்படுத்தும் படியும் சுகாதார துறையினர் கேட்டுகொண்டு உள்ளனர்.