குளித்தலையில் மண்டை ஓடுகளுடன் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 80 பேர் கைது

குளித்தலையில் மண்டை ஓடுகளுடன் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 80 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-03-21 18:09 GMT
கரூர்
குளித்தலை, 
ஆர்ப்பாட்டம்
கரூர் மாவட்டம், குளித்தலை பஸ் நிலையம் அருகே மண்டை ஓடுகளுடன்  தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. 
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகள் கூறுகையில், தேர்தலுக்கு முன்பு விவசாய விளை பொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபம் தரும் விலையை தருவதாக கூறிய பிரதமர் மோடி ஒரு கிலோ நெல்லுக்கு ரூ.54 தருவதாக கூறினார். ஆனால் ரூ.20 மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. 
அதிலும் ஒரு கிலோ நெல்லுக்கு ரூ.1 முதல் 2 வரை அதிகாரிகள் லஞ்சம் கேட்கிறார்கள். ஒரு டன் கரும்புக்கு ரூ.8,100 கொடுப்பதாக கூறி தருவது ரூ.2,900 மட்டுமே இதிலும் சர்க்கரை ஆலைகள் ரூ.10 ஆயிரம் கோடி விவசாயிகளுக்கு பாக்கி வைத்துள்ளது. இரண்டு மடங்கு லாபகரமான விலையை விவசாய விளைபொருட்களுக்கு கொடுக்கும் வரை அனைத்து விவசாயிகளுக்கும் அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வாங்கிய கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டுமென்ற வேண்டுகோளை வைத்து போராடும் விவசாயிகளை கொள்ளையடிக்கும் தேசிய மயமான வங்கிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 
நிலங்களை ஜப்தி..
அதுபோல திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கரும்புலிப்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி பன்னீர்செல்வம் என்பவர் கடந்த 2006-ம் ஆண்டு குளித்தலையில் உள்ள வங்கியில் டிராக்டர் மற்றும் பைப் லைன் போட ரூ.12 லட்சம் வாங்கும் பொழுது ரூ.2 லட்சம் பிடித்தம் செய்து ரூ.10 லட்சம் கொடுத்துள்ளார்கள். அதில் ரூ.9 லட்சத்தை அவர் வங்கியில் கட்டியுள்ளார். ஆனால் வங்கியில் பன்னீர்செல்வம் ரூ.68 லட்சம் தரவேண்டும் என்று வழக்கு போட்டு அவரது பூர்வீக சொத்தை 5 வாரிசுகள் இருக்கும் பொழுது அவர்களை கேட்காமலேயே ரூ.50 லட்சத்திற்கு 11.5 ஏக்கர் நிலத்தினை ஏலம் விட்டுள்ளனர். இந்த நிலையில் பன்னீர்செல்வம் தற்போது தற்கொலை செய்து கொள்ள முயற்சித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நிலத்தை ஏலம் விட்ட வங்கி நிர்வாகத்தை கண்டித்தும், இரண்டு மடங்கு லாபகரமான விலையை கொடுக்கும் வரை விவசாய நிலங்களை ஜப்தி செய்யக்கூடாது என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம் எனவும் தெரிவித்தனர்.
சாலை மறியல்
பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் அனைவரும் கோரிக்கைகளை வலியுறுத்தி குளித்தலை பஸ் நிலையம் எதிரே திடீெரன சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த குளித்தலை போலீஸ் துணை சூப்பிரண்டு ஸ்ரீதர், இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட 39 பெண்கள் உள்பட 80 பேரை கைது செய்தனர். இதற்கிடையில், அய்யாக்கண்ணு உள்ளிட்ட சிலர் குளித்தலை கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று தங்களுடைய கோரிக்கை மனுவை கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் முரளிதரனிடம் வழங்கி அந்த மனுவை பிரதமருக்கு அனுப்பி வைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்