ஓய்வு பெற்ற டிரைவர் தரையில் படுத்து போராட்டம்

தேனி அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு ஓய்வு பெற்ற டிரைவர் தரையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

Update: 2022-03-21 17:53 GMT
தேனி: 

தேனி ராஜாக்களம் பகுதியை சேர்ந்தவர் வடிவேல் (வயது 60). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். நேற்று இவர் தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு வந்தார். பணிமனை முன்பு தரையில் துண்டை விரித்து படுத்து  போராட்டத்தில் ஈடுபட்டார். 

தகவல் அறிந்ததும் பழனிசெட்டிபட்டி போலீசார் அங்கு வந்து அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், ‘நான் அரசு போக்குவரத்து கழகத்தில் சுமார் 38 ஆண்டுகள் பணியாற்றினேன். கடந்த 2020-ம் ஆண்டு உடல் நலக்குறைவு காரணமாக விருப்ப ஓய்வுபெற்றேன். எனக்கான பணப் பலன்கள் இதுவரை வழங்கப்படவில்லை. 

இதற்காக நான் அலைக்கழிக்கப்படுகிறேன். சில மாதங்களுக்கு முன்பு இதே இடத்தில் போராட்டம் நடத்தினேன். ஆனாலும் எனக்கு பணப்பலன்கள் கிடைக்கவில்லை. எனவே எனது பணப்பலன்களை வழங்கக்கோரி காலவரையின்றி இங்கேயே படுத்து போராடப் போகிறேன்’ என்றார். இதையடுத்து அவரிடம் போக்குவரத்து கழக அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவருக்கான பணப்பலன்கள் விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் எழுத்துப் பூர்வமாக உறுதி அளித்தனர். அதன்பிறகு அவர் போராட்டத்தை கைவிட்டார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்