155 வீடுகளில் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு துண்டிப்பு

விழுப்புரத்தில் வரி கட்டாததால் 155 வீடுகளில் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு துண்டிக்கப்பட்டன. மேலும் 6 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

Update: 2022-03-21 17:46 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் நகராட்சியில் சொத்து வரி ரூ.4 கோடியே 27 லட்சமும், குடிநீர் வரி  ரூ.1 கோடியே 85 லட்சமும், காலிமனை வரி ரூ.38 லட்சமும், தொழில் வரி ரூ.1 கோடியே 35 லட்சமும், குத்தகை வகையில் ரூ.1 கோடியே 4 லட்சமும், திடக்கழிவு மேலாண்மை கட்டணம் ரூ.1 கோடியே 8 லட்சமும், பாதாள சாக்கடை கட்டணம் ரூ.1 கோடியே 92 லட்சமும், அரசுகட்டிடங்கள் மூலம் ரூ.3.25 கோடியும் பாக்கி உள்ளது. இவ்வாறாக நகராட்சிக்கு வரவேண்டிய வரி ரூ.15 கோடிக்கு மேல் உள்ளதால் நகரில் அடிப்படை வசதி செய்ய முடியவில்லை எனவும், இந்த வரியை வருகிற 31-ந் தேதிக்குள் நகராட்சி கணினி வசூல் மையத்திலும், இணையதளம் மூலமாகவும் செலுத்த வேண்டும் என்றும் நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா வேண்டுகோள் விடுத்திருந்தார். 

ஜப்தி நடவடிக்கை 

அதுமட்டுமின்றி வரிபாக்கியை வசூலிக்க நகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. நகரம் முழுவதும் ஒலிபெருக்கி மூலம் அறிவுரை கூறியும், வரி செலுத்தாவிட்டால் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
இதனால் விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள கணினி வசூல் மையத்தில் இன்று வரி செலுத்துவதற்காக ஏராளமானோர் திரண்டனர். இந்த வரியை வசூல் செய்யும் வகையில் கூடுதல் கவுன்ட்டர் திறக்கப்பட்டது. பொதுமக்கள் வரிசையில் நின்று வரியை செலுத்தினர். 
குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு துண்டிப்பு 
இதற்கிடையில் பல ஆண்டுகளாக நகராட்சிக்கு வாடகை செலுத்தாத கடைகள், குடிநீர் மற்றும் பாதாள சாக்கடைக்கான வரி கட்டாதவர்களின் பட்டியலை நகராட்சி அதிகாரிகள் தயார் செய்தனர். அந்த பட்டியலின்படி நேற்று அதிரடி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர். 
அதன்படி நகராட்சிக்கு வரி செலுத்தாத 100 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பும், 55 வீடுகளில் பாதாள சாக்கடை இணைப்பும் துண்டிக்கப்பட்டன. மேலும் நகராட்சிக்கு வாடகை செலுத்தாததால் 6 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன.

மேலும் செய்திகள்