தமிழகத்தில் அதிக வனப்பரப்பு நிறைந்த 2-வது மாவட்டம் குமரி கலெக்டர் அரவிந்த் தகவல்
தமிழகத்தில் 2-வது அதிக வனப்பரப்புள்ள மாவட்டம் குமரி மாவட்டம் என உலக வனநாள் தினத்தில் கலெக்டர் அரவிந்த் தெரிவித்தார்.
நாகர்கோவில்,
தமிழகத்தில் 2-வது அதிக வனப்பரப்புள்ள மாவட்டம் குமரி மாவட்டம் என உலக வனநாள் தினத்தில் கலெக்டர் அரவிந்த் தெரிவித்தார்.
உலக வனநாள் தினம்
உலக வன நாள் தினத்தையொட்டி மாவட்ட வனத்துறையின் சார்பில் நாகர்கோவிலை அடுத்த மணக்குடி பொழிமுகம் பகுதியில் மாங்குரோவ் மரக்கன்றுகளை நடும் பணி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். மாவட்ட வன அதிகாரி இளையராஜா முன்னிலை வகித்தார்.
அங்கு கலெக்டர் அரவிந்த் மாங்குரோவ் மரக்கன்றுகளை நடும் பணியை தொடங்கி வைத்து கூறியதாவது:-
ஆய்வு
காடுகள் மக்களுக்கு வழங்கும் சேவைகளை போற்றும் விதமாகவும், காடுகளை பாதுகாப்பதற்காகவும் உலக வனநாள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தேசிய வன கொள்கையின்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் 33 சதவீதம் வனப்பரப்பு பெற்றிருக்க வேண்டும். வனப்பரப்பு என்பது வனத்துறை கட்டுப்பாட்டிற்குள் கணக்கில்லை. ஒரு எக்டேர் மேல் மரங்கள் இருப்பதே வனப்பரப்பு ஆகும். ஆனால் நமது மாவட்டத்தின் சிறப்பு என்பது 33 சதவீதம் பாதுகாக்கப்பட்ட காடுகளே இருக்கிறது. வனப்பரப்பு 59.5 சதவீதம் குமரி மாவட்டத்தில் உள்ளது.
தமிழகத்திலேயே நீலகிரி மாவட்டத்துக்கு அடுத்தபடியாக 2-வதாக அதிக வனப்பரப்பு உள்ள மாவட்டம் குமரி மாவட்டமாகும். தமிழக அரசு மேலும் காடுகளை அதிகரிப்பதற்காக பசுமை திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் நமது மாவட்டத்தில் 2 லட்சத்து 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இயற்கை பேரிடர்களை தடுக்கும்
இதில் ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் சதுப்புநில காடுகளை பாதுகாக்கும் வண்ணம் 50 ஆயிரம் மரக்கன்றுகளை நடும் நிகழ்வின் தொடக்கமாக மாங்குரோவ் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கடல் அரிப்பு மற்றும் சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களை தடுக்கும் பணிகளில் மாங்குரோவ் மரக்கன்றுகள் முக்கிய பங்கு வகிக்கிறது. மாங்குரோவ் மரக்கன்றுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது பறவைகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுகிறது. குறிப்பாக ஆற்று நீர் கடல் நீரோடு கலக்காமல் தடுக்கிறது. எனவே மாங்குரோவ் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
வாழ்த்து
இதனை தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் உலக வன நாள் மற்றும் உலக நீர் நாள் தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் அரவிந்த் மரக்கன்றுகள் நட்டு வைத்தார். அப்போது செண்பகராமன்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 12 -ம் வகுப்பு மாணவி கே.கஸ்தூரி 110 தாவரவியல் பெயரை 55 நொடிகளில் ஒப்புவித்து உலக சாதனை புரிந்தமைக்காக தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
நிகழ்ச்சிகளில் முதன்மைக் கல்வி அதிகாரி புகழேந்தி, வேளாண்மை இணை இயக்குநர் சத்தியஜோஸ், கல்வி மாவட்ட அதிகாரி (நாகர்கோவில்) பிரின்ஸ் ஆரோக்கியராஜ், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் மலர்விழி, முதன்மை கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் (மேல்நிலைக்கல்வி) சுரேஷ்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.