குப்பை இல்லா மாநகராட்சியாக திருப்பூர் மாநகராட்சி உருவாக்கப்படும் என்று முதல் மாமன்ற கூட்டத்தில் மேயர் தினேஷ்குமார் கூறினார்

குப்பை இல்லா மாநகராட்சியாக திருப்பூர் மாநகராட்சி உருவாக்கப்படும் என்று முதல் மாமன்ற கூட்டத்தில் மேயர் தினேஷ்குமார் கூறினார்

Update: 2022-03-21 17:34 GMT
திருப்பூர்:
குப்பை இல்லா மாநகராட்சியாக திருப்பூர் மாநகராட்சி உருவாக்கப்படும் என்று முதல் மாமன்ற கூட்டத்தில் மேயர் தினேஷ்குமார் கூறினார்.
நன்றி தெரிவித்து தீர்மானம்
திருப்பூர் மாநகராட்சி முதல் மாமன்ற கூட்டம் நேற்று காலை திருப்பூர் மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டம் காலை 10.20 மணிக்கு தொடங்கியது. துணை மேயர் பாலசுப்பிரமணியன், ஆணையாளர் கிராந்திகுமார் பாடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேயர் தினேஷ்குமார் தலைமை தாங்கி திருக்குறளை கூறி அதன் விளக்கத்தையும் தெரிவித்து கூட்டத்தை தொடங்கினார்.
முதல் தீர்மானமாக, ஜனநாயக முறைப்படி உள்ளாட்சி தேர்தலை நடத்திய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தும், 2-வது தீர்மானமாக மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களித்தவர்களுக்கும், வாக்காளிக்காதவர்களுக்கும் நன்றி தெரிவித்தும், மக்களின் அடிப்படை வசதிகளையும், புதிய வளர்ச்சி திட்டங்களையும், தொலைநோக்கு பார்வையுடன் வெளிப்படை தன்மையோடு நிர்வாகத்தை வழங்கி தூய்மையான நகரமாக கட்டமைக்க உறுதியளித்து மாநகர மக்களுக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானத்தை மேயர் கூறினார்.
இந்த தீர்மானத்தை வரவேற்று மூத்த கவுன்சிலர்கள் மற்றும் பெண் கவுன்சிலர்கள் பேசினார்கள். பின்னர் தொடர்ந்து தங்கள் வார்டு பிரச்சினைகளை தெரிவித்தனர். அதுபோல் தங்களுக்கு வாக்களித்த வார்டு மக்களுக்கு ஒவ்வொரு கவுன்சிலர்களும் நன்றி தெரிவித்து பேசினார்கள்.
குடிநீர் பிரச்சினை
கவுன்சிலர் ராதாகிருஷ்ணன்:-
குடிநீர் பிரச்சினை தலைதூக்கியுள்ளது. 4-வது குடிநீர் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும். 10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது என்று தெரிவிக்கிறார்கள். அதை முறைப்படுத்த வேண்டும். நாளொன்றுக்கு 600 டன் குப்பை தேங்குகிறது. குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் திட்டத்தை நிறைவேற்றி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை மேம்படுத்த வேண்டும். பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் குழாய் திட்டத்துக்கு தோண்டப்பட்ட குழிகளால் சாலைகள் மோசமாக உள்ளது. இதை சீரமைக்க வேண்டும்.
கவுன்சிலர் இல.பத்மநாபன்:-
மக்களுக்கு சீரான குடிநீர் வினியோகத்தை செய்வது அவசியம். குண்டும், குழியுமான சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும். மக்கள் தங்கள் பகுதி அடிப்படை வசதிகளை நிறைவேற்றிக்கொடுக்க அதிகம் எதிர்பார்க்கிறார்கள். 4-வது குடிநீர் திட்டத்தை விரைந்து செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். மாநகரின் வளர்ச்சி திட்டங்களுக்கு அனைத்து கவுன்சிலர்களும் ஒத்துழைக்க வேண்டும்.
கவுன்சிலர் கோவிந்தசாமி:-
குடிநீர், கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு, குப்பை அள்ளுவது என அடிப்படை வசதிகளை மக்களுக்கு செய்து கொடுக்க வேண்டியுள்ளது. அதை செய்து கொடுத்தால் மக்களை சிரமம் இல்லாமல் நாம் சந்திக்க முடியும்.
குப்பை வரி
கவுன்சிலர் ராஜேந்திரன்:-
சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணத்துக்கு சமமாக குப்பை வரி வசூலிக்கப்படுகிறது. இதன்காரணமாக வரி வசூலிப்பில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. குப்பை வரியை தவிர்த்து மற்ற வரிகளை முதலில் வசூலித்தால் மாநகராட்சிக்கு வருவாய் கிடைக்கும். குப்பை வரியை முறைப்படுத்த வேண்டும். வார்டுகளில் துப்புரவு தொழிலாளர்கள் எந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படுகிறது என்பதை தெரிவிக்க வேண்டும்.
கவுன்சிலர் நாகராஜ்:-
சாக்கடை கால்வாயில் மண் தேங்கியுள்ளதால் கழிவுநீர் செல்ல முடியாமல் உள்ளது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. சாலைகளை செப்பனிட வேண்டும்.
இதுபோல் அனைத்து கவுன்சிலர்களும் மக்களின் அடிப்படை பிரச்சினையான குடிநீர் பிரச்சினை, குப்பை தேக்கம், கழிவுநீர் கால்வாய் தூர்வாருதல், சாலையை செப்பனிடுதல், தெருவிளக்கு பராமரிப்பு, சப்பை தண்ணீர் வினியோகம் ஆகிய பிரதான கோரிக்கைகளை தெரிவித்தார்கள்.
4-வது குடிநீர் திட்டம்
இதற்கு மேயர் தினேஷ்குமார் பதில் அளித்து பேசியதாவது:-
4-வது குடிநீர் திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்ற முனைப்புடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, எம்.எல்.ஏ. செல்வராஜ் ஆலோசனைப்படி, ஆணையாளரின் முயற்சியோடு திட்டம் முழுமை பெறுவதற்கு பணியாற்றி வருகிறோம். 4 அல்லது 5 மாதங்களில் அந்த திட்டம் செயல்பாட்டுக்கு வர ஏற்பாடு செய்து வருகிறோம். மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் கவுன்சிலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றினால் மட்டுமே வளர்ச்சிப்பணிகளை செயல்படுத்த முடியும்.
கவுன்சிலர்கள் தங்கள் கோரிக்கைளை தெரிவித்துள்ளீர்கள். வரும் காலங்களில் ஒருங்கிணைந்து செயல்பட்டு கவுன்சிலர்களின் கோரிக்கைகளை சுணக்கம் இல்லாமல் மாநகராட்சி நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும். வருவாய் இனங்களை பெருக்க கவுன்சிலர்கள் ஒத்துழைக்க வேண்டும். அதன் மூலமாகவே வளர்ச்சி திட்டங்களை செய்ய முடியும். மாநில அளவில் நமக்கு நாமே திட்டத்தை செயல்படுத்துவதில் திருப்பூர் மாநகராட்சி 2-வது இடத்தில் உள்ளது.
குப்பை இல்லா மாநகராட்சி
திருப்பூர் மாநகராட்சியை முன்னோடி மாநகராட்சியாக, குப்பையில்லாத மாநகராட்சியாக உருவாக்க வேண்டும் என முனைப்புடன் முதல்-அமைச்சர், நகர்ப்புற அமைச்சரிடம் முதல் கோரிக்கையாக வைக்கப்பட்டது. திடக்கழிவு மேலாண்மையில் நல்ல திட்டத்தை செயல்படுத்தவும் கோரிக்கை வைக்கப்பட்டது. குடிநீர் வினியோகத்தில் வெளிப்படைத்தன்மையை ஊழியர்கள் கடைபிடிக்க வேண்டும். குடிநீர் வினியோகம் அடுத்த 15 நாட்களில் எந்தெந்த பகுதிகளில் எந்த நாட்களில் வினியோகம் செய்யப்படும் என்று ஆணையாளர் திட்டமிட்டு அறிவித்துள்ளார். திருட்டுத்தனமான இணைப்பு மற்றும் தண்ணீர் திருடுவதை கண்காணிக்க வேண்டும். கோடை காலமாக இருப்பதால் குடிநீர் வினியோகம் முறைப்படுத்தப்படும்.
துப்புரவு பணியாளர்கள் வெளிப்படை தன்மையோடு வார்டு வாரியாக ஒதுக்கீடு செய்யப்படும். இது கவுன்சிலர்களுக்கு தெரியப்படுத்தப்படும். முதல்கட்டமாக மாநகரில் 400 குப்பை தொட்டிகள் வைக்கப்படும். அனைவரும் ஒன்று சேர்ந்து புதிய மாநகராட்சியை கட்டமைப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
---------------

மேலும் செய்திகள்