மூதாட்டிக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை

பெரியகுளம் அரசு மருத்துவமனையில் மூதாட்டி ஒருவருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் குழுவினர் சாதனை படைத்துள்ளனர்.;

Update: 2022-03-21 17:30 GMT
பெரியகுளம்: 

பெரியகுளத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் பலர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில் அரசு மருத்துவமனையில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் தேவதானப்பட்டியை சேர்ந்த வசந்தா (வயது 62) என்ற பெண்ணுக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. இந்த அறுவை சிகிச்சையை மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஹரிஹரன், வெங்கடேஷ், ஜித்தின்அகமது மற்றும் மயக்கவியல் நிபுணர்கள் திவ்யா, லட்சுமி பிரதா ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் செய்து சாதனை படைத்துள்ளனர்.  இந்த அறுவை சிகிச்சையை மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் அன்புசெழியன், மருத்துவமனை கண்காணிப்பாளர் குமார், நிலைய அலுவலர் ஆசியா உள்பட டாக்டர் குழுவினர் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

அப்போது நலப்பணிகள் இணை இயக்குனர் கூறுகையில், தனியார் மருத்துவமனைக்கு இணையாக அரசு மருத்துமனையில் இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய விரும்புபவர்கள் அரசு மருத்துவமனையில் சேர்ந்து அறுவை சிகிச்சை செய்து பயன்பெறலாம் என்றார்.

மேலும் செய்திகள்