காளை விடும் விழாவில் மாடுகள் முட்டி 32 பேர் காயம். போலீசார் தடியடி

பள்ளிகொண்டாவில் நடந்த காளை விடும் விழாவில் மாடுகள் முட்டியதில் 32 பேர் காயமடைந்தனர். போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

Update: 2022-03-21 17:29 GMT
அணைக்கட்டு

பள்ளிகொண்டாவில் நடந்த காளை விடும் விழாவில் மாடுகள் முட்டியதில் 32 பேர் காயமடைந்தனர். போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

காளை விடும் விழா

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா பள்ளிகொண்டாவில்   காளை விடும் விழா நடந்தது. விழாவிற்கு அணைக்கட்டு தாசில்தார் விநாயகமூர்த்தி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமூர்த்தி, பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி, தாமோதரன், தயாளன், புருஷோத்தமன் உள்ளிட்டோர் உறுதிமொழி ஏற்றுக் கொண்டு விழாவை தொடங்கி வைத்தனர்.

போட்டியில் கலந்து கொள்ள நெல்லூர்பேட்டை, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், வாணியம்பாடி, பரதராமி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 200 காளைகள் அழைத்துவரப்பட்டன. கால்நடை மருத்துவ குழுவினர் பரிசோதனைக்கு பின் 196 காளைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனையடுத்து ஒவ்வொரு காளையும் இரண்டு சுற்றுகள் விடப்பட்டன. காளைகள் ஓடும் பாதையில் கூட்டம் அதிகமாக இருந்ததால் மாடுகள் முட்டித்தள்ளியதில் 32 பேர் காயமடைந்தனர். அவர்களில் இரண்டு பேர் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

தடியடி

குறைந்த நேரத்தில் இலக்கை அடைந்த காளையின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக ரூ.60,666, இரண்டாம் பரிசாக ரூ.44,444 உள்ளிட்ட 53 பரிசுகள் வழங்கப்பட்டன.
50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர். விழா நடைபெறும் நேரத்தில் உள்ளூர் இளைஞர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். தொடர்ந்து பிற்பகல் 2 மணி வரை விழா நடைபெற்றது. விழாவை வருவாய் ஆய்வாளர் இந்துமதி, கிராம நிர்வாக அலுவலர் கவுதம், சதீஷ், கிராம உதவியாளர்கள் பிரான்சிஸ், வேலாயுதம் உள்ளிட்டோர் கண்காணித்தனர்.

காளை படுகாயம்

பார்வையாளர்கள் அதிக அளவில் கூடியிருந்ததால் காளைகள் ஓடுவதற்கு வழிதெரியாமல் திக்குமுக்காடி குடியிருப்புக்குள் புகுந்து ஓடியதில் மோட்டார் சைக்கிள் மீது மோதி காளை ஒன்று படுகாயமடைந்தது. அந்த காளைக்கு கால்நடை மருத்துவர் சிகிச்சை அளித்தார்.

மேலும் செய்திகள்