குறைந்த விலையில் தங்கம் தருவதாக பெண்ணிடம் ரூ5 லட்சம் வாங்கிக் கொண்டு ஓட முயன்றவர் கைது

குறைந்த விலையில் தங்கம் தருவதாக பெண்ணிடம் ரூ5 லட்சம் வாங்கிக் கொண்டு ஓட முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-03-21 17:29 GMT
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை பகுதியை சேர்ந்தவர் அனிதா (வயது 35). இவர் ஸ்டிக்கர் கடை நடத்தி வருகிறார். இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு குடியாத்தம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (32) சந்தித்து தன்னிடம் கலப்படமில்லாத சுத்த தங்கம் இருப்பதாகவும், 250 கிராம் தங்கத்தை ரூ.5 லட்சத்துக்கு தருவதாகவும் கூறியுள்ளார். இதை நம்பிய அனிதா தனது கடையில் வேலை செய்யும் பணியாளருடன் சோகத்தூர் அருகே உள்ள கோவில் பகுதியில் வெங்கடேசனை சந்தித்து ரூ.5 லட்சம் கொடுத்துள்ளார். அப்போது தங்கம் எனக்கூறி வெங்கடேசன் கொடுத்த நகைகளை பரிசோதித்தபோது அவை பித்தளை நகை என தெரியவந்தது.அப்போது அங்கிருந்து பணத்துடன் தப்பி ஓட முயன்றார். வெங்கடேசனை அந்த பகுதியில் இருந்தவர்கள் பிடித்து தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் தர்மபுரியை சேர்ந்த கமலா, ருக்மணி, கிருஷ்ணகிரியில் இருந்து தர்மபுரியில் உள்ள கோவிலுக்கு வந்த கண்ணாயிரம் ஆகியோரிடம் நகை திருட்டில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. மேலும் பல திருட்டு சம்பவங்களில் அவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் வெங்கடேசனை நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.5 லட்சம் பணம் மற்றும் 25 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்