வாணியம்பாடி அருகே ரூ.31 கோடி பணம், 150 பவுன் நகை புதையல் கிடைக்கும் என கூறி ரூ.56 லட்சம் மோசடி
வாணியம்பாடி அருகே ரூ.31 கோடி பணம் மற்றும் 150 பவுன் நகை புதையல் இருப்பதாகக்கூறி பெண்ணிடம் ரூ.56 லட்சம் மோசடி செய்த 2 பெண்கள் உள்பட 3 பேர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
வாணியம்பாடி
வாணியம்பாடி அருகே ரூ.31 கோடி பணம் மற்றும் 150 பவுன் நகை புதையல் இருப்பதாகக்கூறி பெண்ணிடம் ரூ.56 லட்சம் மோசடி செய்த 2 பெண்கள் உள்பட 3 பேர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
ரூ.31 கோடி புதையல்
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த மதனாஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் தேவராஜ். இவருடைய மனைவி நவமணி. தேவராஜ் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். நவமணி விவசாம் செய்து வருகிறார். ஈச்சம்பட்டு பகுதியை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 3 பேர் நவமணியிடம் நண்பர்களாக பழகி உள்ளனர். அப்போது ரூ.31 கோடி பணம் மற்றும் 150 பவுன் நகைகள் புதையல் இருப்பதாகவும், பணம் செலவு செய்தால் அதனை எடுக்க முடியும் எனவும் அவர்கள் நவமணியிடம் கூறி உள்ளனர்.
அதன்படி கடந்த 2018-ம் ஆண்டு முதல் தற்போது வரை நவமணியிடம் சுமார் ரூ.56 லட்சம் வரை அவ்வப்போது பல தவணைகளில் வாங்கி உள்ளனர்.
2 பெண்கள் உள்பட 3 பேர் மீது புகார்
பணம் கொடுத்த நவமணி புதையல் குறித்து பலமுறை கேட்டுள்ளார். அப்போது அவர்கள் நீதிபதி, வழக்கறிஞர்கள் போன்று தொலைபேசியில் பேசி பதில் அளித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த நவமணி சம்பவம் குறித்து போலீஸ் டி.ஜி.பி முதல் வாணியம்பாடி தாலுகா போலீஸ் நிலையம் வரை இணையவழி மூலம் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதையல் இருப்பதாக கூறி பெண்ணை ஏமாற்றி ரூ.56 லட்சம் மோசடி செய்த சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.