தனியார் பள்ளி விடுதி மாடியில் இருந்து குதித்து பிளஸ்2 மாணவி தற்கொலை முயற்சி நீதிபதி நேரில் விசாரணை
தர்மபுரி அருகே தனியார் பள்ளி விடுதி மாடியில் இருந்து குதித்து பிளஸ்-2 மாணவி தற்கொலைக்கு முயன்றார். இதுகுறித்து நீதிபதி நேரில் விசாரணை நடத்தினார்.
நல்லம்பள்ளி:
தர்மபுரி அருகே தனியார் பள்ளி விடுதி மாடியில் இருந்து குதித்து பிளஸ்-2 மாணவி தற்கொலைக்கு முயன்றார். இதுகுறித்து நீதிபதி நேரில் விசாரணை நடத்தினார்.
பிளஸ்-2 மாணவி
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 17 வயது மாணவி தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று காலை மாணவி விடுதியின் 2-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் மாணவிக்கு கால்முறிவு மற்றும் உடலில் பல்வேறு பகுதிகளில் காயம் ஏற்பட்டது.
இதுபற்றி விடுதி காப்பாளர்கள் பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அதியமான்கோட்டை போலீசார் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் விரைந்து வந்து மாணவியை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
நீதிபதி விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தர்மபுரி மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி வனிதா மருத்துவமனைக்கு நேரில் சென்று மாணவியிடம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து போலீசார், மாணவி என்ன காரணத்திற்காக விடுதி மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார்?, மேலும் அவராக குதித்தாரா? அல்லது அவரை வேறு யாராவது மாடியில் இருந்து கீழே தள்ளி விட்டார்களா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பின்னர் மாணவி மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து போலீசார், பள்ளி வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிளஸ்-2 மாணவி விடுதி மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தர்மபுரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.