பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 7 பேருக்கு ரூ.1½ லட்சம் மதிப்பிலான தையல் எந்திரங்கள்-கலெக்டர் ஸ்ரேயாசிங் வழங்கினார்

நாமக்கல்லில் நேற்று நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 7 பேருக்கு ரூ.1½ லட்சம் மதிப்பிலான தையல் எந்திரங்களை கலெக்டர் ஸ்ரேயாசிங் வழங்கினார்.

Update: 2022-03-21 17:15 GMT
நாமக்கல்:
குறைதீர்க்கும் கூட்டம்
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு மொத்தம் 257 மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் வழங்கினர்.
இந்த மனுக்களை உரிய அலுவலர்களிடம் வழங்கி, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
தையல் எந்திரங்கள்
மாற்றுத்திறனுடைய குழந்தைகளின் பெற்றோர், தங்கள் குழந்தைகளை வீட்டிலேயே பராமரிப்பதால் பொருளாதார மேம்பாடு அடைய தாங்கள் பார்த்து வந்த தொழில் அல்லது வேலையை இழக்கும் சூழ்நிலை ஏற்படுகின்றது. எனவே மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர், குழந்தைகளை வீட்டிலேயே பராமரிப்பதற்கு ஏதுவாக சுயதொழில் செய்து வருமானம் ஈட்டும் வகையில், 7 நபர்களுக்கு தலா ரூ.21 ஆயிரத்து 168 வீதம் மொத்தம் ரூ.1 லட்சத்து 48 ஆயிரத்து 176 மதிப்பிலான தையல் எந்திரங்களை கலெக்டர் ஸ்ரேயாசிங் வழங்கினார்.
மேலும் கலெக்டர் அலுவலக தரைத்தளத்தில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு மாற்றுத்திறனாளிகள் நல அலுவலருக்கு உத்தரவிட்டார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கதிரேசன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் ரமேஷ் மற்றும் தாசில்தார்கள், அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்