ஆலாம்பாளையம் பேரூராட்சி 15-வது வார்டில் குடியிருப்பு பகுதியில் குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு-பொதுமக்கள் கலெக்டரிடம் மனு
ஆலாம்பாளையம் பேரூராட்சி 15-வது வார்டில் குடியிருப்பு பகுதியில் குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அந்த பகுதி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
நாமக்கல்:
கலெக்டரிடம் மனு
குமாரபாளையம் தாலுகா ஆலாம்பாளையம் பேரூராட்சி 15-வது வார்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் திரண்டு வந்து, குடியிருப்பு பகுதியில் குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் ஸ்ரேயாசிங்கிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
ஆலாம்பாளையம் பேரூராட்சி 15-வது வார்டுக்கு உட்பட்ட தாஜ்நகர், தென்றல்நகர், ஸ்ரீகார்டன், பூச்சகாடு, முல்லைநகர், குமரன்நகர், அன்னை சத்யாநகர், எம்.ஜி.ஆர்.நகர் பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் பேர் வசித்து வருகிறோம். பேரூராட்சி சார்பாக தென்றல்நகர் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக தெரிகிறது. இதனால் வயதானவர்கள், சிறுவர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
கைவிட வேண்டும்
எனவே குடியிருப்பு பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் குப்பை கிடங்கு அமைத்து, உரம் தயாரிக்கும் முடிவை கைவிட வேண்டும். ஆலாம்பாளையம் பேரூராட்சி சார்பாக ஆயக்காட்டூர் மற்றும் வெங்கடேஸ்புரத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் சுமார் ரூ.1 கோடியே 30 லட்சம் செலவில் கட்டிடங்கள், தொட்டிகள் கட்டப்பட்டு செயல்பாட்டில் உள்ளன.
எனவே பொதுமக்கள் அதிகமாக வசிக்கும் ஆலாம்பாளையம் 15-வது வார்டு குடியிருப்பு பகுதியில் புதிதாக குப்பை கிடங்கு அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த கூடாது. இவ்வாறு அதில் அவர்கள் கூறி இருந்தனர்.