குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்க சமூக இடைவெளியின்றி குவிந்த மக்கள்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுக்க சமூக இடைவெளியின்றி மக்கள் குவிந்தனர்.
தேனி:
குறைதீர்க்கும் கூட்டம்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினார்.
இக்கூட்டத்தில் மனு கொடுக்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் குவிந்தனர். வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் மக்கள் சமூக இடைவெளியை கைவிட்டு கூட்டரங்கு முன்பு முண்டியடித்தனர். போலீசார் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், வெளியே வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால், நிழலில் நிற்பதாக கூறி போலீசாரிடம் சிலர் வாக்குவாதம் செய்தனர். இதனால், போலீசாரும் வேறு வழியின்றி அவர்களை நிழலில் கூட்டமாக நிற்க அனுமதித்தனர்.
337 மனுக்கள் குவிந்தன
கூட்டரங்கின் வெளியே காத்திருப்போர் அறை இருந்தும் பயன்பாடு இன்றி உள்ளது. எனவே, காத்திருப்போர் அறையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்தி மக்கள் வெயிலில் நிற்பதை தவிர்க்கவும், கோடை காலத்தில் மனு கொடுக்க வரும் மக்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்யவும் மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கிடையே கூட்டத்தில் மொத்தம் 337 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் இந்த கூட்டத்தில் 16 பயனாளிகளுக்கு ரூ.29 லட்சத்து 77 ஆயிரத்து 108 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் 4 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகைக்கான உத்தரவு ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார்.
மக்கள் நீதி மய்யம்
கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் கணேஷ்குமார் தலைமையில் நிர்வாகிகள், கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில், லஞ்சம், ஊழலை கட்டுப்படுத்தி, பொதுமக்கள் அரசு சேவைகளை விரைவாக பெற்றிட வழிவகுக்கும் சேவை பெறும் உரிமை சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தனர்.
அதுபோல், உத்தமபாளையம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தனர். அவர்கள் தங்களுக்கு சொந்த வீடு இல்லாததால் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி கலெக்டரிடம் தனித்தனியாக கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர். மேலும் ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்களும் இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு மனு கொடுத்தனர்.