ஏ.டி.எம். கார்டு எண்ணை பிறரிடமும் தெரிவிக்க கூடாது என சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தல்

ஏ.டி.எம். கார்டு எண்ணை பிறரிடமும் தெரிவிக்க கூடாது என சைபர் கிரைம் போலீசார் வலியுறுத்தினர்.

Update: 2022-03-21 16:55 GMT
வேலூர்

வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் உள்ள தற்காலிக பயிற்சி பள்ளியில் 150 ஆண் காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் சார்பில் பெருகிவரும் இணையவழி குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு  அளிக்கப்பட்டது. சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் அபர்ணா, பயிற்சி பள்ளி இன்ஸ்பெக்டர் கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், இணையவழி மூலம் தற்போது பல்வேறு குற்றங்கள் நடக்கின்றன. எனவே கவனமுடன் இணையதளங்களை பயன்படுத்த வேண்டும். குறிப்பாக ஏ.டி.எம். கார்டு மற்றும் ஒருமுறை பயன்படுத்தப்படும் எண்கள் (ஓ.டி.பி.) உள்ளிட்டவற்றை பிறரிடம் தெரிவிக்க கூடாது. உங்கள் செல்போன் எண்ணிற்கு பரிசு விழுந்துள்ளது, அதிக வட்டி தருகிறோம் என்று கூறி யாராவது வங்கி விவரங்களை கேட்டாலும் தெரிவிக்க வேண்டாம்.

இணையதளம் மூலம் பணம் இழப்பு ஏதேனும் ஏற்பட்டால் சைபர் கிரைம் உதவி எண் 1930-க்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். http://www.cybercrime.gov.in. என்ற இணையதளத்தில் புகார் அளிக்க வேண்டும் என்று கூறினர்.
தொடர்ந்து பயிற்சி காவலர்களுக்கு சைபர் கிரைம் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

மேலும் செய்திகள்