பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் கள்ளச்சாராயம் குறித்து 40 இடங்களில் விழிப்புணர்வு

பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் கள்ளச்சாராயம் குறித்து 40 இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளதாக கோட்ட கலால்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2022-03-21 16:46 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் கள்ளச்சாராயம் குறித்து 40 இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளதாக கோட்ட கலால்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கள்ளச்சாராயம்

கோவை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் மதுபானம் மற்றும் கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. இதற்கு சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் தலைமை தாங்கி, தொடங்கிவைத்தார்.
பறை அடித்து நடனம் மூலம் பொதுமக்களுக்கு கள்ளச்சாராயம் மற்றும் அதன் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பொள்ளாச்சி தாலுகாவில் மட்டும் 10 இடங்களில் நேற்று நடைபெற்றது. இதில் தாசில்தார் அரசகுமார், கோட்ட கலால் அலுவலர் விஜயகுமார் மற்றும் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், மதுவிலக்கு போலீசார் உள்பட பலர் கலந்துகொண்டனர். 
இதுகுறித்து கலால்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

மது மற்றும் கள்ளச்சாராயம் குடிப்பதால் பல்வேறு தீமைகள் ஏற்படுகின்றன. தூக்கமின்மை, வாந்தி, வயிற்றுப்புண், காசநோய், உயர்ரத்த அழுத்தம், இதய வீக்கம் ஏற்படுகிறது. மேலும் மலட்டு தன்மை, கண்பார்வை மங்குதல், கை, கால் வலிப்பு ஏற்படுவது மற்றும் மூளையையும், நரம்பு மண்டலத்தையும் தாக்கி சோர்வு அடைய செய்கிறது. கல்லீரல் பாதிக்கப்படுவதோடு, மாரடைப்பு ஏற்பட்டு திடீர் மரணம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மேலும் மது மற்றும் கள்ளச்சாராயம் குடிப்பதால் மனஅழுத்தம் ஏற்பட்டு தற்கொலைக்கு தூண்டுகிறது. எனவே மது, கள்ளச்சாராயத்திற்கு எதிராக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, வால்பாறை தாலுகாக்களில் 40 இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து நிகழ்ச்சிகளை நடத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்