கொடைக்கானல் நகராட்சிக்கு வாடகை செலுத்தாத 50 கடைகளுக்கு சீல் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

கொடைக்கானல் நகராட்சிக்கு வாடகை செலுத்தாத 50 கடைகளை அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.

Update: 2022-03-21 16:35 GMT
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் உள்ள கே.ஆர்.ஆர்.கலையரங்கம், ஏரிச்சாலை, பிரையண்ட்பூங்கா, கோக்கர்ஸ்வாக் உள்ளிட்ட ப‌ல்வேறு பகுதிகளில் நகராட்சி கட்டுப்பாட்டில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. சுற்றுலா பயணிகளை நம்பி இந்த கடைகளை சிறு வியாபாரிகள் நடத்தி வருகின்றனர், இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் சுற்றுலா பயணிகள் வருகை தடை செய்யப்பட்டதன் காரணமாக இந்த கடைகள் அனைத்தும் பூட்டப்பட்டு இருந்தது.
மேலும் கொரோனா காலத்தில் உள்ள கடை வாடகை நகராட்சிக்கு செலுத்தப்படாமல் நிலுவை தொகையாக இருந்தது. இதனையடுத்து நிலுவை தொகையில் 2 மாத வாடகை ம‌ட்டும் அரசால் தள்ளுபடி செய்யப்பட்டது. எனவே மற்ற வாடகை பாக்கி தொகைக‌ளை விரைவில் செலுத்த வேண்டும் என கடைக்காரர்களுக்கு கொடைக்கானல் நகராட்சி சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டது. 
‘சீல்’ வைப்பு
இவ்வாறு ரூ.4 கோடி வரை நகராட்சிக்கு வாடகை நிலுவை தொகை இருந்தது. இதையடுத்து முதற்கட்டமாக அதிக நிலுவை தொகையுள்ள ஏரிச்சாலையினை சுற்றியுள்ள 50 கடைகளை நகராட்சி அதிகாரிகள் நேற்று அதிகாலை பூட்டி ‘சீல்’ வைத்தனர். மேலும் நிலுவை தொகையை கடை வியாபாரிகள் விரைவில் செலுத்த வேண்டும் என நகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தினர். 
இந்நிலையில் சீசன் தொடங்க உள்ளதால் கடைகளை மூடினால் கடும் பாதிப்பு ஏற்படும் எனவும், நிலுவை தொகையை செலுத்துவதற்கு கூடுத‌லாக‌ கால அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் வியாபாரிகள் நகராட்சி தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன், ஆணையாளர் நாராயணன் ஆகியோரிடம் கோரிக்கை வைத்தனர். அப்போது நடந்த பேச்சுவார்த்தையில், வருகிற ஜூலை மாதத்திற்குள் வாடகை கட்டணம் முழுவதையும் சிறு வியாபாரிகள் செலுத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. மேலும் ‘சீல்’ வைக்கப்பட்ட கடைகள் விரைவில் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்