கல்வராயன்மலையில் உள்ள ஓட்டல்களில் தரமற்ற உணவு விற்பனை அதிகாரிகள் ஆய்வு செய்ய மலைவாழ் மக்கள் கோரிக்கை
கல்வராயன்மலையில் உள்ள ஓட்டல்களில் தரமற்ற உணவு விற்பனை அதிகாரிகள் ஆய்வு செய்ய மலைவாழ் மக்கள் கோரிக்கை
கச்சிராயப்பாளையம்
ஏழைகளின் சுற்றுலாத் தலமாக விளங்கி வரும் கல்வராயன்மலை கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களை இணைக்கும் அடர்ந்த வனப்பகுதியாக உள்ளது. இங்குள்ள நீர்வீழ்ச்சிகளில் குளித்து மகிழவும், படகு சவாரி செய்வதற்காகவும் கள்ளக்குறிச்சி மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். மேலும் கல்வராயன்மலையில் 171 மலை கிராமங்களில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளும், மலைவாழ் மக்களும் உணவு, குடிநீர் பாட்டில், மளிகை பொருட்கள் வாங்க இங்குள்ள வெள்ளிமலை என்ற சிறிய நகரப்பகுதிக்கு தான் வருவார்கள். இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மளிகை கடைகளில் 10-க்கும் மேற்பட்ட ஓட்டல்கள் உள்ளன.
இந்த நிலையில் இங்குள்ள ஓட்டல்களில் தரமற்ற உணவுகள் வினியோகம் செய்யப்படுவதாகவும், காலாவதியான குளிர்பானம் மற்றும் குடிநீர் பாட்டில்கள் வினியோகம் செய்யப்படுவதாகவும் புகார் எழுகிறது. தரமற்ற உணவுகளை வாங்கி சாப்பிடுபவர்கள் மயக்கம் வயிற்றுப்போக்கு போன்ற நோய்களுக்கு உள்ளாகின்றனர். எனவே சுற்றுலா பயணிகள் மற்றும் மலை வாழ் மக்கள் நலன் கருதி கல்வராயன்மலை வெள்ளிமலையில் உள்ள ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து தரமற்ற உணவுகளை வினியோகம் செய்யும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.