கிராம நிர்வாக பெண் அதிகாரி வீட்டில் 8¼ பவுன் நகைகள் திருட்டு
காரங்காடு அருகே கிராம நிர்வாக பெண் அதிகாரி வீட்டில் கதவை உடைத்து 8¼ பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
திங்கள்சந்தை:
காரங்காடு அருகே கிராம நிர்வாக பெண் அதிகாரி வீட்டில் கதவை உடைத்து 8¼ பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
கிராம நிர்வாக அதிகாரி
குமரி மாவட்டம் இரணியல் போலீஸ் சரகம் காரங்காடு அருகே உள்ள நுள்ளிவிளையை சேர்ந்தவர் பிரான்சிஸ் கென்னடி. இவரது மனைவி சோபி (வயது47). இவர் கல்லுக்கூட்டம் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று இவர்கள் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றனர். பின்னர் நேற்று காலையில் திரும்பி வந்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டின் உள்ளே சென்ற போது பொருட்கள் சிதறி கிடந்தன.
நகைகள் திருட்டு
படுக்கை அறையில் இருந்த அலமாரி உடைக்கப்பட்டு துணிமணிகள் வெளியே வீசப்பட்டிருந்தது. அலமாரியில் வைத்திருந்த 2 பவுன் தங்க காப்பு, 2 பவுன் எடையில் 4 ஜோடி கம்மல், தங்க நெக்லஸ் என மொத்தம் 8¼ பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது.
வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட யாரோ மர்ம நபர்கள் நேற்று முன்தினம் இரவில் கதவை உடைத்து உள்ளே புகுந்து நகைகளை திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். இதற்காக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி மர்ம நபர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.