வங்கிக்கடன் வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

வங்கிக்கடன் வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். அப்போது போலீசாருடன் மாற்றுத்திறனாளிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2022-03-21 16:14 GMT

திண்டுக்கல்:
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர். இந்தநிலையில் மாற்றுத்திறனாளிகள் 50-க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாற்றுத்திறனாளிகளுக்கு நிபந்தனையற்ற வங்கி கடன் பெற்றுத்தர கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

வாக்குவாதம்
இதற்கிடையே மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர ஸ்கூட்டர்களை வழங்குவதற்காக கலெக்டர் விசாகன் கலெக்டர் அலுவலகத்தைவிட்டு வெளியே வந்தார். இதைப்பார்த்த போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் தங்கள் கோரிக்கை குறித்து கலெக்டரிடம் தெரிவிப்பதற்காக சென்றனர்.
அவர்களை போலீசார் தடுத்தனர். இதனால் போலீசாருக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கிடையே தகவலறிந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் விரைந்து வந்து மாற்றுத்திறனாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

கலைந்து சென்றனர்
அப்போது மாற்றுத்திறனாளிகள் சார்பில் சிலர் மட்டும் சென்று கலெக்டரிடம் கோரிக்கை குறித்து தெரிவிக்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார். இதையடுத்து 4 மாற்றுத்திறனாளிகள் கலெக்டரை சந்தித்து பேசினர். அப்போது வங்கிக்கடன் பெற விண்ணப்பித்தபோது 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளின் விண்ணப்பங்களை வங்கி அதிகாரிகள் நிராகரித்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து பேசிய கலெக்டர் விசாகன் தகுதியான பயனாளிகளுக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இதுவரை மாற்றுத்திறனாளிகள் 1,200 பேருக்கு வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது. நிராகரிக்கப்பட்ட மனுதாரர்கள் கடன் பெற தகுதியானவர்களா? என்று விசாரணை நடத்தி கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதில் சமாதானம் அடைந்த மாற்றுத்திறனாளிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். கலெக்டர் அலுவலகத்தில் போலீசாருடன் மாற்றுத்திறனாளிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்