மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 பேர் சாவு
மோட்டார் சைக்கிள்கள் மோதல் 2 பேர் சாவு
பேரூர்
கோவையை அடுத்த பேரூர் ஆலாந்துறை முகாசிமங்கலம் தண்ணீர்த் தொட்டி வீதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 52). பால் வியாபாரி. இவர், தோட்டங்களில் பால் வாங்கி மாதம்பட்டியில் உள்ள பண்ணைக்கு விற்று வந்தார்.
இவர் மாதம்பட்டியில் உள்ள பண்ணைக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் சென்ன னூர் தண்ணீர் பந்தல் பிரிவு - சிறுவாணி மெயின்ரோடு அப்புச்சி மார் கோவில்மடம் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது, எதிரே ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் வேகமாக வந்தனர். அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள், நாகராஜ் மீது வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த நாகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
நாகராஜ் மீது மோதிய மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த ராஜேஷ் (வயது 35) மற்றும் அவருக்கு பின்னால் அமர்ந்திருந்த 2 பேர் உள்பட 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
அவர்கள் 3 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ராஜேஷ் பரிதாப மாக உயிரிழந்தார். விபத்தில் படுகாயம் அடைந்த மற்ற 2 பேரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்த புகாரின் பேரில் பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.