ஊட்டி மாரியம்மன் கோவிலில் தேர் ஊர்வலம்
ஊட்டி மாரியம்மன் கோவிலில் தேர் ஊர்வலம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஊட்டி
ஊட்டி மாரியம்மன் கோவிலில் தேர் ஊர்வலம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மாரியம்மன் கோவில்
ஊட்டியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் தேர்திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். அதேபோல் நடப்பாண்டில் கடந்த 18-ந் தேதி திருவிழா தொடங்கியது.
இதையொட்டி கணபதி ஹோமம், நவகலச பூஜை, இரவு 7 மணிக்கு பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெற்றது. காப்பு கட்டுதல் நடந்தது.
இந்த நிலையில் திருவிழாவை ஒட்டி முதல் தேர் ஊர்வலம் நடைபெற்றது. காலை 9 மணிக்கு மகா கணபதி ஹோமம், 11 மணிக்கு அபிஷேக அலங்காரம், மதியம் 12 மணிக்கு சிறப்பு பூஜை, 2 மணிக்கு மாவிளக்கு பூஜை நடந்தது.
மாலை 3 மணிக்கு மலர்களால் அலங்கரிக்கப் பட்ட பல்லக்கில் புலி வாகனத்தில் ஆதிபராசக்தி அலங்காரத்தில் மாரியம்மன் எழுந்தருளினார்.
தேர் ஊர்வலம்
சிறப்பு பூஜைக்கு பின்னர் மாரியம்மன் கோவில் முன்பு இருந்து தேர் ஊர்வலம் தொடங்கியது. லோயர் பஜார், ராஜீவ்காந்தி ரவுண்டானா, மெயின் பஜார், காபிஹவுஸ் ரவுண்டானா வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது.
முக்கிய வீதிகளில் பக்தர்கள் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த அம்மனை தரிசனம் செய்தனர். மேலும் ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
ஊர்வலத்தை ஒட்டி கர்நாடகா மாநிலம் மைசூருவில் புகழ்பெற்ற தொள்ளு குனிதா நடனம் நடைபெற்றது. பெண் கலைஞர்கள் மேளம் இசைத்தபடி, அதன் மீது நின்று நடனமாடினர்.
அதேபோல் கலைஞர்கள் சாமி வேடமிட்டு தத்ரூபமாக நடனமாடினார்கள். கேரளா செண்டை மேளம் முழங்க தேர் ஊர்வலம் நடந்தது. இதையொட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. போக்குவரத்து பாதிப்பு இல்லாமல் வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
தேரோட்டம்
வருகிற ஏப்ரல் 18-ந் தேதி வரை தினமும் மாலை ஒவ்வொரு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதனை அமைப்பினர், உபயதாரர்கள், சமூகத்தார் சார்பில் நடத்தப்படுகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் ஏப்ரல் 19-ந் தேதி மதியம் 2 மணிக்கு நடக்கிறது.
ஏப்ரல் 22-ந் தேதி விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.